ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

பாகிஸ்தான் அணி தொடக்க வீரர் இமாம் உல் ஹக் மற்றும் ஹாரிஸ் சொஹைல் ஆகிய இருவரின் அரைசதம் மற்றும் கடைசி நேர இமாத் வாசிமின் அதிரடியால் 50 ஓவரில் 281 ரன்களை குவித்தது. இமாம் உல் ஹக் 75 பந்தில் 58 ரன்களும், ஹாரிஸ் சொஹைல் 82 பந்தில் 71 ரன்களும், இமாத் வாசிம் 26 பந்தில் 34 ரன்களும் அடித்தனர்.

282 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய  ஜிம்பாப்வே அணி 49..4 ஓவரில் 255 ரன்களுக்கு சுருண்டதால், பாகிஸ்தான் அணி 26  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தான் வீரர்கள் வழக்கமாக ரன் ஓடுவதில் படுமோசம். களத்தில் இருக்கும் 2 பேட்ஸ்மேன்களும் ஒரே க்ரீஸை நோக்கி பலமுறை ஓடி, படுமொக்கையாக ரன் அவுட்டாகியிருக்கிறார்கள். இந்த போட்டியிலும் அப்படி ஒரு ரன் அவுட் சம்பவம் நடந்தது.

இன்னிங்ஸின் 26வது ஓவரில் இமாம் உல் ஹக் பாயிண்ட் திசையில் பந்தை அடிக்க, அதற்கு வேகமாக ஒரு சிங்கிளை எடுத்துவிட நினைத்த ஹாரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக் ரெஸ்பான்ஸ் செய்கிறாரா என்று பார்க்காமலேயே அவராகவே ஓடினார். திடீரென ஹாரிஸ் சொஹைலை தனக்கு பின்னால் பார்த்து அதிர்ச்சியடைந்தார் இமாம் உல் ஹக். இதையடுத்து இருவருமே பேட்டிங் க்ரீஸுக்குள் நுழைய முயல, அந்த போட்டியில் சொஹைல் வென்றார். இதையடுத்து பவுலிங் முனையில் ஜிம்பாப்வே வீரர்கள் ரன் அவுட் செய்ய, அதனால் இமாம் உல் ஹக் ரன் அவுட்டானார். அந்த வீடியோ இதோ..

இதைக்கண்ட ரசிகர்கள், சில விஷயங்கள் எப்போதுமே மாறாது என்று பாகிஸ்தான் வீரர்களை கிண்டலடித்துவருகின்றனர்.