நவம்பரில் ஐசிசி தலைவருக்கான தேர்தல் – ஜெய் ஷா போட்டியிட்டால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு!
நவம்பர் மாதம் நடைபெரும் ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜெய் ஷா போட்டியிட்டால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த தலைவருக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. தற்போது உள்ள கிரெக் பார்க்லே 4 ஆண்டுகளாக ஐசிசி தலைவராக இருந்து வருகிறார். இதையடுத்து வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஐசிசி தலைவருக்கான தேர்தலில் பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி தலைவர் தேர்தலில் ஜெய் ஷா போட்டியிட விரும்பினால், போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம். மேலும், ஐசிசி தலைவரானால் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார். அதோடு, வரும் 2028 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக வருவதற்கு எல்லா தகுதியும் உண்டு. கடந்த 2015 ஆம் ஆண்டு பிசிசிஐயில் இணைந்த ஜெய் ஷா 2019 ஆம் ஆண்டு பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்றார். கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலாளராக பொறுப்பில் இருந்து வரும் ஜெய் ஷா ஐசிசி தேர்தலில் போட்டியிட்டால் பிசிசிஐயிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் இந்திய அணியின் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர், ஜெய் ஷாவின் பதவிக்காலத்தில் இந்தியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பிசிசிஐ எடுத்த நடவடிக்கைகளுக்காக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.