உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. அடுத்த போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டி நாளை நடக்கிறது. 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நேற்று முன் தினம் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் ஸ்மித் - அலெக்ஸ் கேரியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர குல்டர்நைலின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப், பூரான், கேப்டன் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும், ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா தகாத வார்த்தைகளை பேசியுள்ளார். ஐசிசி விதிப்படி, களத்தில் ஆபாச வார்த்தைகளை பேசுவது, எதிரணி வீரர்களிடம் தகாத வார்த்தைகளை பேசுவது ஆகியவை எல்லாம் குற்றம். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கின்போது 29வது ஓவர் முடிவில் ஸாம்பா ஆபாச வார்த்தைகளில் பேசியதை கள நடுவர்கள் கண்டுபிடித்துவிட்டனர். ஐசிசி விதிப்படி ஷரத்து 2.3-ஐ மீறியுள்ளார் ஸாம்பா. முதல் லெவல் தவறு என்பதால் அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கி எச்சரித்துள்ளை ஐசிசி. 

இரண்டு ஆண்டுகளுக்குள் 4 டீமெரிட் புள்ளிகளை பெற்றால் அந்த வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். அந்தவகையில், ஸாம்பாவிற்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கி எச்சரித்துள்ளது ஐசிசி.