ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைப்படி, இந்த தகவலை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் ஷகிப் அதை செய்ய தவறிவிட்டார். இதுபோன்ற தரகர்களின் போன் கால்களை எதார்த்தமாக ஆய்வு செய்த ஐசிசி, அவர்களில் ஒரு குறிப்பிட்ட தரகர் ஷகிப்பை தொடர்புகொண்டதை கண்டறிந்தது. ஷகிப் அல் ஹசன் சூதாட்டத்தில் ஈடுபட மறுப்பு தெரிவித்திருந்தாலும் அந்த விஷயத்தை தெரியப்படுத்தாதது ஐசிசி விதிப்படி தவறு. 

எனவே இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஷகிப். இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் தடைவிதித்தது ஐசிசி. ஷகிப் அல் ஹசனுக்கு தடை விதித்ததை அடுத்து, ஷகிப் மற்றும் தீபக் அகர்வால் என்ற அந்த சூதாட்ட தரகருக்கு இடையேயான உரையாடலை வெளியிட்டுள்ளது ஐசிசி.

அதில், “ ஷகிப் அல் ஹசன் வங்கதேச பிரீமியர் லீக்கில் தாக்கா டைனமைட்ஸ் அணியில் ஆடியபோது, முதன்முறையாக தீபக் அகர்வால் என்ற தரகர், ஷகிப்பை 2017ம் ஆண்டு தொடர்புகொண்டுள்ளார். அதன்பின்னர் இருவரும் தொடர்பிலேயே இருந்துவந்துள்ளனர். ஷகிப்புக்கு தெரிந்தவரிடம் இருந்து அவரது போன் நம்பரை வாங்கிய அகர்வால், அவரை தொடர்புகொண்டுள்ளார். அதன்பின்னர் இருவரும் அவ்வப்போது வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்துள்ளனர். 

2017 நவம்பரில் மத்தியில், ஷகிப்பை நேரில் சந்திக்க வேண்டும் என்று அகர்வால் கேட்டுள்ளார். அதன்பின்னர் வங்கதேசம், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடரில் ஷகிப் ஆடிய சமயத்தில் அவருக்கு மெசேஜ் செய்த அகர்வால், அதில் ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றதற்காக வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, நாம் இருவரும் இணைந்து செயல்படலாமா அல்லது ஐபிஎல் வரை காத்திருக்கவா என்று கேட்டுள்ளார். 

இதில் இருவரும் இணைந்து செயல்படலாமா என்றால், ஷகிப் அல் ஹசன் ஆடும் அணியின், அணி ரகசியங்களையும் முக்கியமான விஷயங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று அர்த்தம். அணியின் முக்கிய தகவல்களை அளிப்பதுதான், அந்த இணைந்த செயல்பாடு. 2018 ஜனவரி 23ல், ப்ரோ.. இந்த தொடரில் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளார். இதற்கிடையே சில மெசேஜ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.