சீனாவில் உருவான கொரோனா வைரஸூக்கு உலகம் முழுதும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதே அவசியம் ஒன்றே ஒரே வழி என்பதால், உலகம் முழுதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

எனவே கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னரும் ஐபிஎல் தொடங்கப்படுவது சந்தேகம் தான். எனினும் அதுகுறித்து இந்த மாத இறுதியில் விவாதிக்கப்படவுள்ளது. 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டி20 உலக கோப்பையை நடத்துவது குறித்து ஐசிசி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளது. 

டி20 உலக கோப்பை அக்டோபர் மாத மத்தியில் தான் தொடங்கவுள்ளது. எனவே அதற்குள்ளாக கொரோனா தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டுவிடும் என்பதால், டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி நடக்கும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், கொரோனாவின் தாக்கமும் அதன் தீவிரமும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், வரும் 29ம் தேதி, பிசிசிஐ, கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வங்கதேச கிரிக்கெட் வாரியம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்  வாரியம், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இலங்கை கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட 12 டெஸ்ட் ஆடும் நாடுகளின் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் ஐசிசி அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். கான்ஃபரன்ஸ் காலில் அந்த ஆலோசனை நடக்கவுள்ளது. அப்போது, டி20 உலக கோப்பையை நடத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.