கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. கொரோனாவிலிருந்த தப்பிக்க, தனிமைப்படுதலும் சமூக விலகலுமே சிறந்த வழி என்பதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 

கொரோனா எதிரொலியாக அனைத்து கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில், வீட்டிலேயே முடங்கியுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்து கொடுக்கும் விதமாக ஐசிசி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஐசிசி ஒளிபரப்பு பார்ட்னர்களின் மூலம், கடந்த 45 ஆண்டுகளில் நடந்த காலத்தால் அழியாத கிரிக்கெட் போட்டிகள், சர்ச்சையான தருணங்கள், சண்டைகள், ஸ்லெட்ஜிங்குகள், முக்கியமான போட்டிகளின் ஹைலைட்ஸ்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் கடந்த 45 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில், 90ஸ் கிட்ஸ் தவறவிட்ட, அவர்கள் பிறப்பதற்கு முந்தைய முக்கியமான போட்டிகள், வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள், தருணங்கள் ஆகியவற்றை ரீலைவின் மூலம் காணமுடியும்.

வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, இது செம விருந்தாக அமையும். 1975, 1979, 1983 ஆகிய உலக கோப்பைகளின் முக்கியமான போட்டிகள், காலத்தால் அழியாத போட்டிகள், ஹைலைட்ஸ் ஆகியவற்றை பார்க்கமுடியும். டி20 உலக கோப்பைகள், சாம்பியன் டிராபி தொடர்களின் போட்டிகள், மகளிர் உலக கோப்பை போட்டிகள், அண்டர் 19 உலக கோப்பை போட்டிகள் என கடந்த 45 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றின் மறக்கமுடியாத சம்பவங்களின் தொகுப்பை ஐசிசி வழங்கவுள்ளது. 

அதேபோல எதிரி அணிகளான இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சர்ச்சை சம்பவங்கள், மோதல்கள், ஸ்ளெட்ஜிங்குகள் ஆகியவற்றின் தொகுப்பும் ஒளிபரப்பப்பட உள்ளது. ஆஷஸ் தொடர்களின் முக்கியமான போட்டிகள், சண்டைகள், மோதல்களும் ஒளிபரப்பப்படும். 

 எனவே ஐசிசியின் இந்த முன்னெடுப்பு, கொரோனாவால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்.