கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருந்த டி20 உலக கோப்பை நடப்பதும் சந்தேகமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி தொடங்கி நவம்பர் 15 வரை டி20 உலக கோப்பை போட்டிகள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தன. 

டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவிலிருந்து மீண்டு அக்டோபர் மாதத்துக்குள் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்புவது சாத்தியமில்லை. எனவே திட்டமிட்டபடி டி20 உலக கோப்பையை நடத்துவது சந்தேகமாகியுள்ளது. 

இதுகுறித்து ஐசிசி போர்டு உறுப்பினர்கள் ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளனர். இந்நிலையில், டி20 உலக கோப்பை குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஐசிசி மெம்பர் ஒருவர், ஐசிசி நிர்வாக குழு, 3 ஆப்சன் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். 1. டி20 உலக கோப்பையை திட்டமிட்டபடியே, தனிமனித இடைவெளியை உறுதி செய்து நடத்துவது, 2. ரசிகர்களே இல்லாமல் போட்டிகளை நடத்துவது, 3. டி20 உலக கோப்பை தொடரை 2022ம் ஆண்டிற்கு ஒத்திவைப்பது ஆகிய மூன்று ஆப்சன்கள் இருக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் 2022ம் ஆண்டுக்கு டி20 உலக கோப்பையை நடத்தும் முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க முடியாது. ஏனெனில் அதற்கு அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். அதேநேரத்தில் திட்டமிட்டபடி, வரும் அக்டோபரில் நடத்துவதும் சவாலான காரியம். 16 அணிகளின் வீரர்கள், அணி நிர்வாகத்தினர், டிவி குழுக்கள் என அனைவருக்கும் தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது கடினம் என்றார்.