இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட் போட்டியில், ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் சிராஜை இன ரீதியாக, ஆஸி., ரசிகர்கள் மட்டம்தட்டி பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

சிட்னி டெஸ்ட்டில் 4 நாட்கள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், 2வது இன்னிங்ஸில், ஆஸி., அணி நிர்ணயித்த 406 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 4ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாள் மட்டும் எஞ்சியுள்ளது.

இந்த போட்டியின், 3ம் நாள் ஆட்டத்தில் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய வீரர் முகமது சிராஜையும், அதேபோல பும்ராவையும், ஆஸி., ரசிகர்கள் சிலர் மது அருந்திவிட்டு இன ரீதியாக மட்டம்தட்டி பேசினார். இதுகுறித்து உடனடியாக முகமது சிராஜ் கள நடுவரிடம் புகார் அளித்தார். பின்னர் கேப்டன் ரஹானே மற்றும் சீனியர் வீரர் அஷ்வின் ஆகியோர் களநடுவர்களிடமும், போட்டி ரெஃப்ரியிடமும் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆறு ரசிகர்கள் ஸ்டேடியத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். 

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அறிக்கையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான சிட்னி டெஸ்ட்டில் நடந்த இனவெறி சம்பவத்தை ஐசிசி வன்மையாக கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும், சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகமும் செயல்பட்ட விதம் சரியானது. இதுமாதிரியான இனவெறி சம்பவங்களுக்கு இடமே கிடையாது. இந்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நடத்தும் விசாரணை மற்றும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐசிசி முழு ஆதரவு அளிக்கும். இனவெறி சம்பவங்களை சகித்துக்கொள்ளமுடியாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.