2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு 4 வீரர்கள் பரிந்துரை! ஒரு இந்திய வீரர் கூட லிஸ்ட்டில் இல்லை
2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி வழங்கும் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. பாபர் அசாம், ஜோ ரூட் ஆகிய இருவரது பெயர்களும் இல்லாதது பெரிய அதிர்ச்சி.
ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கிவருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொரு ஃபார்மட்டிலும் சிறப்பாக ஆடிய வீரர்கள் பெயர்களை நாமினேட் செய்து, அவர்களில் ஃபார்மட்டுக்கு தலா ஒருவர் வீதம் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்துவருகிறது.
அந்தவகையில், 2022ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு 4 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து ஆல்ரவுண்டரும் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ், அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோ, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ககிசோ ரபாடா ஆகிய 4 வீரர்களும் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. மேலும் பாபர் அசாம் மற்றும் ஜோ ரூட் ஆகிய 2 சிறந்த டெஸ்ட் வீரர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்படவில்லை.
2022ம் ஆண்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 2 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 870 ரன்கள் அடித்துள்ளார். 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அதனால் பென் ஸ்டோக்ஸின் பெயர் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடித்து ஆடக்கூடிய ஜானி பேர்ஸ்டோ நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அபாரமாக ஆடினார். 2022ம் ஆண்டில் 10 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 66.31 என்ற சராசரியுடன் 1061 ரன்களை குவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மெல்பர்னில் டெஸ்ட்..? பிசிசிஐ தகவல்
ஆஸ்திரேலிய அணியின் பெரிய பலமாக திகழும் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, இந்த ஆண்டு 11 போட்டிகளில் ஆடி 1080 ரன்களை குவித்துள்ளார். 4 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களை விளாசியுள்ளார். தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ககிசோ ரபாடா, 2022ல் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.