2024 முதல் 2031 வரையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான முழு அட்டவணையையும் எந்தெந்த நாடுகள் இந்த தொடர்களை நடத்துகின்றன என்றும் முழு விவரத்தை வெளியிட்டுள்ளது ஐசிசி.
இந்த ஆண்டு (2021) இந்தியாவில் நடக்க வேண்டிய டி20 உலக கோப்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அடுத்த ஆண்டு (2022) டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 2023ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது.
அதன்பின்னர் 2024லிருந்து 2031ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளுக்கான சர்வதேச தொடர்களுக்கான முழு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது ஐசிசி.
2024ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 நாடுகளிலும் நடத்தப்படுகிறது.
2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. கடைசியாக 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடர், 8 ஆண்டுகளுக்கு பிறகு 2025ம் ஆண்டு மீண்டும் நடத்தப்படுகிறது.
2026ம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் சேர்த்து நடத்துகின்றன.
2027ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடத்தப்படவுள்ளது.
2028ம் ஆண்டு டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கின்றன.
2029ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா நடத்துகிறது.
2030ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் நடத்தப்படுகின்றன.
2031ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியா மற்றும் வங்கதேசத்தில் நடக்கவுள்ளது.
2024ம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபியும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலக கோப்பையும் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளன. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடங்கப்பட்டதிலிருந்து எந்தவித தடையும் இல்லாமல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலக கோப்பை, 2029ம் ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி, 2031ல் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய 3 தொடர்களும் இந்தியாவில் நடக்கவுள்ளன.
