உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இன்னும் 13 நாட்களே உள்ளது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்த உலக கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளையும் எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பை நடக்கும் இங்கிலாந்தில் ஆடுகளங்கள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஒரு இன்னிங்ஸில் 500 ரன்கள் அடிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதனால் இந்த உலக கோப்பை ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைய உள்ளது என்பதில் ஐயமில்லை.

உலக கோப்பை நெருங்கிய நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ள நிலையில், உலக கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்கள் பெயரை அறிவித்துள்ளது ஐசிசி. 

24 வர்ணனையாளர்கள் வர்ணனை செய்ய உள்ளனர். இந்தியாவின் சார்பில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் கிரிக்கெட்டில் இந்தியாவின் வர்ணனை முகமாக இருக்கும் ஹர்ஷா போக்ளே ஆகிய மூவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவிற்கு 2015ல் உலக கோப்பையை வென்று கொடுத்த மைக்கேல் கிளார்க், குமார் சங்கக்கரா(இலங்கை), பிரண்டன் மெக்கல்லம்(நியூசிலாந்து), ஷான் போலாக்(தென்னாப்பிரிக்கா), மைக்கேல் ஹோல்டிங்(வெஸ்ட் இண்டீஸ்), கிரீம் ஸ்மித்(தென்னாப்பிரிக்கா), வாசிம் அக்ரம்(பாகிஸ்தான்), ரமீஸ் ராஜா(பாகிஸ்தான்), நாசர் ஹூசைன்(இங்கிலாந்து), சைமன் டோல், மைக்கேல் சிலேட்டர், மார்க் நிகோலஸ் என 24 பேர் வர்ணனையாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.