உலக கோப்பையை வெல்லும் அணிக்கு கோடிகளை அள்ளிக்கொடுக்கும் ஐசிசி!! பரிசுத்தொகையின் முழு பட்டியல்
உலக கோப்பையை வெல்லும் அணி, இறுதி போட்டியில் தோற்கும் அணி என ஒட்டுமொத்தமாக முழு பரிசுத்தொகை விவரத்தை வெளியிட்டுள்ளது ஐசிசி.
உலக கோப்பைக்கு இன்னும் 13 நாட்களே உள்ளது. இந்த உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் அனைத்து அணிகளுமே அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த முறை உலக கோப்பை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
இதுவரை உலக கோப்பையை ஒருமுறை கூட வென்றிராத இங்கிலாந்து அணிக்கு, இந்த முறை நல்ல வாய்ப்புள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இந்த கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக இங்கிலாந்து பார்க்கப்படுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.
ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் 2009ல் நடந்த டி20 உலக கோப்பை மற்றும் 2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஆகிய சர்வதேச கோப்பைகளை வென்றுள்ளது. எனவே பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியும் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தித்தான் ஆடும். தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் தொடரில் கூட சிறப்பாகவே ஆடிவருகிறது.
தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழ்வதுடன், இந்த முறை அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.
இந்நிலையில், உலக கோப்பையை வெல்லும் அணி, இறுதி போட்டியில் தோற்கும் அணி என ஒட்டுமொத்தமாக பரிசுத்தொகை பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதன்படி உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர்(ரூ.28 கோடி) பரிசாக வழங்கப்படும். இறுதி போட்டியில் தோற்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர்(ரூ.14 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்படும் எனவும் அரையிறுதியில் தோற்கும் 2 அணிகளுக்கு தலா ரூ.16 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.