சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் திகழ்ந்துவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை குவித்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனையும் அனைத்து ஷாட்டுகளையும் ஆடும் திறமையையும் வளர்த்துக்கொண்டு சிறந்து விளங்குகிறார். ஆனால் ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைல் முற்றிலும் வேறானது. அவர் மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் அல்ல. முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர். 

இருவரும் முற்றிலும் வெவ்வேறான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்களாக இருந்தாலும், சமகால கிரிக்கெட்டில் இருவருமே ரன்களை குவித்துவருகின்றனர். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் அசத்திவருகிறார்.

இந்நிலையில் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் இயன் சேப்பல் பதிலளித்தார். கோலி - ஸ்மித் யார் சிறந்தவர் என்று கேள்வி எழுப்பப்பட்டது. பேட்ஸ்மேனாகவா அல்லது கேப்டனாகவா என்று இயன் சேப்பல் பதில் கேள்வி எழுப்ப, இதுதான் சான்ஸ் என கேள்வி எழுப்பிய ஊடகம், இரண்டிலுமே சொல்லுங்களேன் என்றதும், கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கோலி தான் சிறந்தவர் என்று பதிலளித்தார்.