வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் உலகம் முழுதும் நடத்தப்படும் மற்ற டி20 லீக் தொடர்களைவிட ஐபிஎல்லுக்கு அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுத்து ஆடுவது ஏன் என பார்ப்போம்.
இந்தியாவில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான ஐபிஎல், 2008ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 15வது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
ஐபிஎல்லை போல உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் சூப்பர் லீக், பிக்பேஷ் லீக், வங்கதேச பிரீமியர் லீக், கனடா பிரிமீயர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன.
மற்ற டி20 லீக் தொடர்களை விட ஐபிஎல் தான் உலகின் மிகப்பெரிய டி20 லீக் தொடர். அதிகமான பணம் புழங்கும் டி20 லீக் தொடரும் ஐபிஎல் தான். ஒரு சீசனில் ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை வாங்க ரூ.90 கோடி அனுமதிக்கப்படுகிறது. இது மற்ற டி20 லீக் தொடர்களுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய தொகை ஆகும்.
மற்ற டி20 லீக்குகளை விட ஐபிஎல் எவ்வளவு தொகை அதிகமாக வழங்குகிறது?
மற்ற டி20 லீக் தொடர்களுடன் ஒப்பிடுகையில், ஐபிஎல் 100% அதிக தொகையை வீரர்களுக்கு வழங்குகிறது. சில சமயங்களில் 200% வரை அதிகமாக வழங்கப்படுகிறது. எனவே மற்ற நாட்டு டி20 லீக் தொடர்கள் ஐபிஎல்லுக்கு பக்கத்தில் கூட வரமுடியாது.
உலகின் முன்னணி லீக் தொடர்களுடன் ஒப்பிடுகையில், ஐபிஎல் தான் வீரர்களுக்கு அதிகமான தொகையை வழங்குவதாக 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட க்ளோபல் ஸ்போர்ட்ஸ் ஊதிய சர்வே தெரிவிக்கிறது. அந்த சர்வே அறிக்கையில், ஐபிஎல்லில் சராசரியாக ஒரு வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.2.78 கோடி ஊதியமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடத்தப்படும் தேசிய கால்பந்து லீக் தொடரில் 16 ஆட்டங்களுக்கு ரூ.1.40 கோடி வழங்கப்படுகிறது. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் கால்பந்து வீரர்களுக்கு ரூ.79 லட்சம் வழங்கப்படுகிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில், ஐபிஎல்லில் வழங்கப்படும் ஊதியம் மிக அதிகம்.
மற்ற டி20 லீக் தொடர்களில் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் ஐபிஎல் ஊதியத்தை ஒப்பிட்டால், இடையேயான வித்தியாசம் புலப்படும்.
டார்ஷி ஷார்ட்:
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டார்ஷி ஷார்ட்டுக்கு பிக்பேஷ் லீக்கில் அவர் ஆடும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ரூ.2 கோடி வழங்குகிறது. இதுதான் பிக்பேஷ் லீக் தொடரில் ஒரு வீரருக்கு வழங்கப்படும் அதிகபட்ச தொகையே. அவர் ஒரேயொரு முறை தான் ஐபிஎல்லில் ஆடியிருக்கிறார். அந்த ஒரு சீசனிலும் அவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழங்கிய ஊதியம் ரூ.4 கோடி.
ரஷீத் கான்:
ஐபிஎல் உட்பட உலகின் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடிவருபவர் ஆஃப்கான் ரிஸ்ட் ஸ்பின்னர் ரஷீத் கான். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் காலண்டர்ஸ் அணிக்காக ஆடிவரும் அவர் ரூ.97 லட்சம் முதல் ரூ.1.2 கோடி வரை பெறுகிறார். இதுதான் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அதிகபட்ச தொகையே. கரீபியன் பிரீமியர் லீக்கில் பார்படாஸ் ராயல்ஸ் அணியில் ஆடும் அவர், ரூ.83 லட்சம் ஊதியமாக பெறூகிறார். பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியிடமிருந்து ரூ.14.7 கோடி பெறுகிறார். ஆனால் ஐபிஎல்லில் அவர் பெறும் தொகை ரூ.15 கோடி.
ஃபாஃப் டுப்ளெசிஸ்:
தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான டுப்ளெசிஸும் உலகம் முழுதும் நிறைய டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். வங்கதேச பிரீமியர் லீக்கில் அவரது ஊதியம் ரூ.93 லட்சம் முதல் ரூ.1.2 கோடி வரை ஆகும். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ரூ.97 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை. ஆனால் ஐபிஎல்லில் அவர் ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
முகமது நபி:
ஆஃப்கான் ஆல்ரவுண்டரான முகமது நபி பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ரூ.44 லட்சம் பெறுகிறார். சிபிஎல்லில் ரூ.97 லட்சம் பெறுகிறார். ஐபிஎல்லில் கேகேஆர் அணி அவரை ரூ.1 கோடிக்கு எடுத்தது.
கிறிஸ் கெய்ல்:
பிக்பேஷ் லீக்கில் கெய்லுக்கு ரூ.74 லட்சமும், சிபிஎல்லில் ரூ.1.19 கோடியும் பெற்றார் கெய்ல். ஆனால் ஐபிஎல்லில் அவருக்கு ரூ.2 கோடி வழங்கியது பஞ்சாப் கிங்ஸ். ஐபிஎல்லில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை ரூ.8.4 கோடி.

ஐபிஎல் மட்டும் ஏன் இவ்வளவு அதிகமான தொகை வழங்குகிறது?
ஐபிஎல் அணிகளுக்கும் பிசிசிஐக்கும் இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? என்ற கேள்வி பொதுவாக அனைவரது மனதிலும் எழும். ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களை பொறுத்தவரை இது வணிகம். இதற்கு வேறு சில வணிக வடிவங்கள் உள்ளன. அங்கு அவர்கள் பணத்தை ஈட்டுகிறார்கள். அதற்கு ஈடாக அவர்கள் தங்கள் ஐபிஎல் உரிமையை வடிவமைப்பதில் முதலீடு செய்கிறார்கள்.
டிரா ஸ்பான்ஸர்கள், போட்டி டிக்கெட்டுகள், மெர்கண்டைஸ் விற்பனைகள் என பல வழிகளில் வருவாய் ஈட்டப்படுகிறது. மீடியா உரிமைத்தொகை மூலம் தான் அதிக வருவாய் ஈட்டப்படுகிறது. இப்போது ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை வைத்திருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.16,347.50 கோடியை வழங்குகிறது.
மேலும், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் மூலம் பெரிய தொகை கிடைக்கிறது. ரூ.670 கோடியை டாடா குழுமம், டைட்டில் ஸ்பான்ஸராக வழங்குகிறது. பேடிஎம் ரூ.326.80 கோடியை பிசிசிஐக்கு ஸ்பான்சர் செய்கிறது.
இதன்மூலம், மற்ற லீக்குகளை விட ஐபிஎல் அதிகமான தொகையை வீரர்களுக்கு வழங்குவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஐபிஎல் அதற்கேற்றவாறு பல வழிகளில் அதிகமான வருவாய் ஈட்டுகிறது.
இந்திய வீரர்கள் ஐபிஎல்லை தவிர வேறு டி20 லீக் தொடர்களில் ஆடமுடியாது. ஆனால் வெளிநாட்டு வீரர்கள் உலகம் முழுதும் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ஆடலாம். ஆனாலும் அவர்களுக்கு ஐபிஎல் அளவிற்கு எந்த லீக்குகளும் ஊதியம் வழங்குவதில்லை. அதனால் தான் உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல்லில் ஆட அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
