இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஆஷஸ் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆடாததால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி செய்கிறார். பாட் கம்மின்ஸ் ஆடாததற்கான காரணம் குறித்து பார்ப்போம். 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கிறது. 2வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இந்த போட்டியிலிருந்து கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியதால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி செய்கிறார். பாட் கம்மின்ஸ் போட்டிக்கு முந்தைய நாள் இரவு ரெஸ்டாரெண்ட்டில் உணவு உண்ணும்போது, கொரோனா பாசிட்டிவ் ஆன நபருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதனால் முன்னெச்சரிக்கையாக தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார் கம்மின்ஸ். இதை அவரே டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாக, அடிலெய்ட் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார். டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கம்மின்ஸ் ஆடாததால் அவருக்கு பதிலாக அறிமுக வீரர் மைக்கேல் நெசெர் ஆடுகிறார். காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் இந்த டெஸ்ட்டில் ஆடாததால், அவருக்கு பதிலாக ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆடுகிறார்.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மைக்கேல் நெசெர், மிட்செல் ஸ்டார்க், ஜெய் ரிச்சர்ட்ஸன், நேதன் லயன்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸின் (3) விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்திருந்தாலும், அதன்பின்னர் டேவிட் வார்னரும் மார்னஸ் லபுஷேனும் இணைந்து அருமையாக ஆடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் டீ பிரேக் வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்துள்ளது.