இந்திய அணி, கபில் தேவ் தலைமையில் 1983லும் தோனி தலைமையில் 2011லும்  என மொத்தம் இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ளது. 2003 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்ற இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. 1996 மற்றும் 2015 ஆகிய உலக கோப்பைகளில் அரையிறுதி வரை சென்றது. 

இந்திய அணி ஐசிசி ஒருநாள் உலக கோப்பையில் நல்ல ரெக்கார்டையே வைத்துள்ளது. இந்திய அணி எல்லா காலக்கட்டத்திலுமே தலைசிறந்த பேட்டிங் அணியாக திகழ்ந்துள்ளது. ஆனால் பவுலிங்கில் தலைசிறந்து விளங்கியதில்லை. ஓரளவிற்கு நல்ல பவுலிங் அணியாக திகழ்ந்ததே தவிர, தற்போது இருப்பதைப்போல் சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்று, சர்வதேச கிரிக்கெட்டில் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியதில்லை. 

ஆனாலும் இந்திய அணியில் பல சிறந்த ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் பவுலர்கள் இருந்துள்ளனர். உலக கோப்பைகளில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்கும் ஆற்றியிருக்கிறார்கள். 1983 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய வீரர் ரோஜர் பின்னி தான். அதேபோல 2011 உலக கோப்பையில் ஜாகீர் கான் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1996 உலக கோப்பையில் அனில் கும்ப்ளே, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

இந்நிலையில், உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பவுலர்களின் பட்டியலை பார்ப்போம். 

5. கபில் தேவ்

கபில் தேவ் உலக கோப்பையில் 26 போட்டிகளில் ஆடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1979 முதல் 1992 வரை நான்கு உலக கோப்பை தொடர்களில் ஆடியுள்ளார் கபில் தேவ். 1983ல் கபில் தேவின் தலைமையில் தான் இந்திய அணி உலக கோப்பையை வென்றது. 

4. அனில் கும்ப்ளே

லெக் ஸ்பின்னரான அனில் கும்ப்ளே இந்திய அணியின் நட்சத்திர பவுலராக திகழ்ந்தவர். இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 1996 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது கும்ப்ளே தான். கும்ப்ளே உலக கோப்பையில் மொத்தம் 18 போட்டிகளில் ஆடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்களில் நான்காமிடத்தில் இருக்கிறார். 2003 உலக கோப்பையில் அனில் கும்ப்ளேவைவிட ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கிற்கு முன்னுரிமை கொடுத்து ஆடவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3. முகமது ஷமி

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான முகமது ஷமி, உலக கோப்பையில் வெறும் 11 போட்டிகளில் ஆடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2015 உலக கோப்பையில் இந்திய அணியில் முக்கிய அங்கம் வகித்த ஷமி, 2019 உலக கோப்பையிலும் ஆடினார். ஆனால் 2019 உலக கோப்பையில் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. 2019 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஷமி ஆடவில்லை. நல்ல ஃபார்மில் அருமையாக வீசிக்கொண்டிருந்த ஷமிக்கு அந்த போட்டியில் வாய்ப்பளித்திருந்தால், போட்டியின் முடிவே கூட மாறியிருக்கும். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் ஷமியின் பவுலிங்கால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது. 

2. ஜவகல் ஸ்ரீநாத்

ஜவகல் ஸ்ரீநாத் 1992 முதல் 2003 வரை நான்கு உலக கோப்பை தொடர்களில் மொத்தம் 34 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறார். 

1. ஜாகீர் கான்

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக நீண்டகாலம் ஆடியவர் ஜாகீர் கான். டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டுவிதமான போட்டிகளிலும் இந்திய அணியின் ப்ரைம் ஃபாஸ்ட் பவுலராக திகழ்ந்தார். உலக கோப்பை தொடர்களில் மொத்தம் 23 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜாகீர் கான், உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 

ஷமி வெறும் 11 போட்டிகளில் ஆடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே இன்னும் 10 போட்டிகளில் ஆடினால் கண்டிப்பாக ஜாகீர் கானை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துவிடுவார்.