விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற மிகப்பெரிய வீரர்களை அணியில் பெற்றிருந்தும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத அணி ஆர்சிபி. ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 

முதல்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் இந்த 3 அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் அதிரடியான மாற்றங்களை செய்துவருகின்றன. ஆனாலும் அந்த அணிகளுக்கு அது பலனளிக்கவில்லை. 

இந்நிலையில், 2020 சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் வீரர்களை பரிமாறிக்கொண்டதுடன், தங்களது தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. 

அந்தவகையில், ஆர்சிபி அணி கழட்டிவிட்டுள்ள மற்றும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை பார்ப்போம். ஆர்சிபி அணி வெளிநாட்டு வீரர்கள் பலரை கொத்தாக கழட்டிவிட்டுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலத்தில், மற்ற அணிகளுடன் கடும் போட்டியிட்டு வாங்கிய ஹெட்மயரை அந்த அணி கழட்டிவிட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் படுபயங்கரமாக அடித்து ஆடிவரும் நியூசிலாந்து வீரர் கோலின் டி கிராண்ட் ஹோமையும் ஆர்சிபி கழட்டிவிட்டுள்ளது. இவர்கள் தவிர, ஆஸ்திரேலிய வீரர்கள் மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் குல்ட்டர்நைல், நியூசிலாந்து வீரர் டிம் சௌதி, தென்னாப்பிரிக்க வீரர்கள் கிளாசன், டேல் ஸ்டெய்ன் ஆகியோரையும் ஆர்சிபி கழட்டிவிட்டுள்ளது. அக்‌ஷ்தீப் நாத், ஹிம்மட் சிங் ஆகிய வீரர்களையும் தூக்கியெறிந்துள்ளது. 

ஆர்சிபி அணி கழட்டிவிட்ட வீரர்கள்:

கோலின் டி கிராண்ட் ஹோம், ஹெட்மயர், டேல் ஸ்டெய்ன், கிளாசன், டிம் சௌதி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் குல்ட்டர்நைல், அக்‌ஷ்தீப் நாத், ஹிம்மட் சிங், கெஜ்ரோலியா, மிலிண்ட் குமார், ப்ரயாஸ் ராய் பர்மான். 

ஆர்சிபி தக்கவைத்த வீரர்கள்:

விராட் கோலி, டிவில்லியர்ஸ், மொயின் அலி, சாஹல், பார்த்திவ் படேல், சிராஜ், பவன் நேகி, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங் மன், தேவ்தத் படிக்கல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி.