இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும் தென்னாப்பிரிக்க அணி 223 ரன்களும் அடித்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் சிப்ளி சிறப்பாக ஆடி சதமடித்தார். பென் ஸ்டோக்ஸ் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக ஆடி 47 பந்தில் 72 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸின் அதிரடியால்தான் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

மொத்தமாக 437 முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 438 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மிகக்கடினமான இலக்குடன், நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செசனில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் அடித்திருந்தது. 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை பீட்டர் மாலனும் நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட கேஷவ் மஹாராஜும் தொடர்ந்தனர். களத்திற்கு வந்ததுமே கேஷவ் மஹாராஜை ஆண்டர்சன் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த கேப்டன் டுப்ளெசிஸ், சுமார் 60 பந்துகள் பேட்டிங் ஆடி, களத்தில் நிலைத்துவிட்டு 19 ரன்களில் ஆட்டமிழந்தார். கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறினார் டுப்ளெசிஸ். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் பீட்டர் மாலன் நிலைத்து நின்று ஆடினார். அவருடன் இணைந்து வாண்டெர் டசன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவருகிறார். அரைசதம் அடித்த மாலன், சதத்தை நெருங்கிவிட்டார். கடைசி நாளான இன்றைய உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு தென்னாப்பிரிக்க அணி 170 ரன்கள் அடித்திருந்தது. 

இரண்டாவது செசன் தொடங்கி நடந்துவருகிறது. மாலனும் வாண்டெர் டசனும் போட்டியை டிரா செய்யும் முனைப்பில் மிகவும் பொறுப்பாகவும் தெளிவாகவும் ஆடிவருகின்றனர். இன்னும் 2 செசன்கள், அதாவது 60 ஓவர்கள் தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டாகிவிடாமல் ஆடியாக வேண்டும். செட்டில் பேட்ஸ்மேன் மாலனுடன் டசன் இருக்கிறார். இவர்களுக்கு அடுத்து டி காக், பிலாண்டர் ஆகியோர் உள்ளனர். பிரிட்டோரியஸும் பேட்டிங் ஆடக்கூடியவர். எனவே போட்டியை டிரா செய்ய வல்ல பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்க அணியில் உள்ளனர். அதேநேரத்தில் ஆண்டர்சன், பிராட் ஆகிய 2 அனுபவம் வாய்ந்த மிகச்சிறந்த பவுலர்கள் இங்கிலாந்து அணியில் உள்ளனர். எனவே தோல்வியை தவிர்க்க முனையும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கும் வெற்றி பெற முனையும் இங்கிலாந்து பவுலர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.