தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் ஆம்லா அண்மையில் அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் சாதனைகளின் நாயகனாக திகழும் விராட் கோலியை விட பல நிறைய மைல்கற்களை ஆம்லா எட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பெரும்பாலான சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர்தான். சச்சினின் சாதனையை சமகாலத்து தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் விராட் கோலி, ஒவ்வொன்றாக முறியடித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, போட்டிக்கு போட்டி புதிய மைல்கல்லை எட்டி வருகிறார்.

ஆனால் ஆம்லா, கோலியை விட சில மைல்கற்களை விரைவாக எட்டியுள்ளதோடு, பல சாதனைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாக் காலிஸுக்கு அடுத்து அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆம்லா. ஆம்லாவின் சாதனைகளை பார்ப்போம்.

1. ஒருநாள் கிரிக்கெட்டில் 1000, 2000, 3000, 4000, 5000, 6000 ரன்கள் மைல்கற்களை விரைவில் எட்டிய வீரர் ஆம்லா.

2. டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு விதமான போட்டிகளிலும் 25 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆம்லாவும் உள்ளார். சச்சின், பாண்டிங், சங்கக்கரா ஆகியோருக்கு அடுத்த வீரராக ஆம்லா உள்ளார். இந்த பட்டியலில் கோலியும் உள்ளார்.

3. டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு விதமான போட்டிகளிலும் 45 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ள 2 வீரர்களில் ஆம்லாவும் ஒருவர். மற்றொருவர் டிவில்லியர்ஸ்.

4. டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாம் வரிசையில் இறங்கி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சங்கக்கரா, டிராவிட், பாண்டிங்கிற்கு அடுத்த இடத்தில் ஆம்லா உள்ளார்.

5. ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி வைத்துள்ள இரண்டாவது தொடக்க வீரர் ஆம்லா. இந்த பட்டியலில் முதலிடத்தில் ரோஹித் சர்மா உள்ளார்.

இதுமாதிரியான பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆம்லா. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆயிரம் ரன்னையும் விரைவில் எட்டிய வீரர் ஆம்லாதான். தொடர்ச்சியாக ரன்களை குவித்துவரும் விராட் கோலி கூட கிடையாது.