உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

இந்திய அணியில் 12 வீரர்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதுதான். நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய வீரர்கள் தான் இழுபறியாக இருந்தது. கடைசியில் நான்காவது ஃபாஸ்ட் பவுலராக யாரையுமே தேர்வு செய்யவில்லை. 

நான்காம் வரிசை வீரராக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவுலிங் ஆப்சன் கூடுதலாக கிடைப்பதுடன் அவர் நல்ல ஃபீல்டரும் கூட என்பதால் அவரை அணியில் எடுத்துள்ளனர். 

அதேபோல மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் எடுக்கப்படுவார் என கருதப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ளனர். ரிஷப் பண்ட்டுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ரிஷப் பண்ட்டை எடுப்பதுபோன்ற தோற்றத்தைத்தான் தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் ஏற்படுத்தியது. ஆனால் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் சொதப்பலாக இருந்ததால், நீண்ட நெடிய அனுபவம் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பிங்கை கருத்தில் கொண்டு தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டுள்ளார். 

எனினும் ரிஷப் பண்ட்டுக்கே பல முன்னாள் வீரர்களும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கின் தேர்வு சர்ப்ரைஸான தேர்வு தான். நீண்ட விவாதத்துக்கு பிறகு தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார். 

இந்திய அணி தேர்வு குறித்த அதிருப்தி பல முன்னாள் வீரர்களுக்கு உள்ளது. அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையிலான அணியை தேர்வு செய்யவே முடியாது. எனினும் சில தேர்வுகள் குறித்து சில முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், அதற்கு சீனியர் ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட்டும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே அளித்த பதில் டுவீட்டில், இது வெறும் தற்காலிகமான அணிதான். மே 23ம் தேதி வரை ஐசிசியின் அனுமதியின்றி அணியை மாற்றிக்கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.