2010-2019 வரையிலான பத்தாண்டின் சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை பல முன்னாள் ஜாம்பவான்கள் தேர்வு செய்துவருகின்றனர். இந்நிலையில், சீனியர் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்ளே, 2019ன் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார். 

2019ன் சிறந்த தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இரண்டு இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே. ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான மயன்க் அகர்வால், அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அபாரமாக ஆடி ரன்களை குவித்தார். 

மயன்க் அகர்வால் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், ஒரு இரட்டை சதத்துடன் 754 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 68.54. அதேபோலவே ரோஹித் சர்மாவும் இந்த ஆண்டில் சிறப்பாக ஆடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் சரியாக சோபிக்காத ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்க தொடரில் முதன்முறையாக தொடக்க வீரராக இறக்கப்பட்டார். தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா, அதே தொடரில் இரட்டை சதமும் அடித்தார்.

இவர்கள் இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்த ஹர்ஷா போக்ளே, மூன்றாம் வரிசையில் நியூசிலாந்தின் டாம் லேதத்தையும் நான்காம் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ல லபுஷேனையும் தேர்வு செய்துள்ளார். ஆஷஸ் தொடரின் இடையே ஸ்மித் காயத்தால் வெளியேறியபோது, அவருக்கு பதிலாக இறங்கி, ஸ்மித் இல்லாத குறையை தீர்த்த லபுஷேன், அதன்பின்னர் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணியில் ஆட வாய்ப்பை பெற்று, அந்த வாய்ப்புகளை மிகச்சிறப்பாக பயன்படுத்தி ஸ்கோர் செய்துவருகிறார். எனவே அவரை தனது அணியில் தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே. 

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங், ஸ்பின் பவுலராக நாதன் லயன் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், நீல் வாக்னர் மற்றும் முகமது ஷமி ஆகிய நால்வரையும் தேர்வு செய்துள்ளார். 

2019ல் சரியாக ஆடாததால் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் ஹர்ஷா போக்ளேவின் அணியில் இடம்பெறவில்லை. 

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த 2019ன் சிறந்த டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், டாம் லேதம், மார்னஸ் லபுஷேன், வாட்லிங்(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, வாக்னர்.