பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில், தனது பந்துவீச்சில் கேட்ச்சை தவறவிட்ட வீரரின் கன்னத்தில் ஃபாஸ்ட் பவுலர் ஹாரிஸ் ராஃப் அறைந்த சம்பவம் அதிர்ச்சியளித்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஜால்மி மற்றும் லாகூர் காலண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் அணி 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது. 159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லாகூர் அணியும் 20 ஓவரில் சரியாக 158 ரன்கள் அடிக்க, ஆட்டம் டை ஆனது.

இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் அணி சூப்பர் ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடிக்க, 6 ரன்கள் என்ற இலக்கை முதல் 2 பந்தில் அடித்து பெஷாவர் அணி வெற்றி பெற்றுவிட்டது.

இந்த போட்டியில் பெஷாவர் அணி முதலில் பேட்டிங் ஆடியபோது, லாகூர் அணி சார்பில் 2வது ஓவரை வீசிய ஹாரிஸ் ராஃப், அந்த ஓவரின் 5வது பந்தில் முகமது ஹாரிஸை வீழ்த்தினார். அதே ஓவரில் 3 பந்துகளுக்கு முன்பாக ஹாரிஸ் ராஃபின் பவுலிங்கில் ஹஸ்ரதுல்லா சேஸாயின் கேட்ச்சை காம்ரான் குலாம் என்ற வீரர் தவறவிட்டார்.

அந்த கடுப்பில் இருந்த ஹாரிஸ் ராஃப், அதே ஓவரில் முகமது ஹாரிஸின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர், அந்த விக்கெட்டை கொண்டாடியபோது, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள வந்த காம்ரான் குலாமை கன்னத்தில் அறைந்தார் ஹாரிஸ் ராஃப். அதற்கு 3 பந்துகளுக்கு முன் தனது பவுலிங்கில் கேட்ச்சை கோட்டைவிட்ட கோபத்தில் இருந்த ஹாரிஸ் ராஃப், காம்ரான் குலாமின் கன்னத்தில் அறைந்தார். ஆனால் காம்ரான் குலாம் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் அவரை கட்டிப்பிடித்து, அதை ஜாலியாக எடுத்துக்கொண்டார். ஆனால் மற்ற வீரர்கள் சற்றே அதிர்ச்சியடைந்துதான் போனார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Scroll to load tweet…