உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி, அதற்கேற்ப சிறப்பாகவே ஆடிவருகிறது. 

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வீழ்த்தி வெற்றி கண்ட இந்திய அணி, இன்றைய போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கே தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது. 

இந்த உலக கோப்பையில், இந்திய அணியில் விராட் கோலி, பும்ராவிற்கு அடுத்தபடியாக பெரிதும் எதிர்பார்க்கப்படுபவர் ஹர்திக் பாண்டியா தான். இளமையும் துடிப்புமிக்க வீரரான ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே தனது 100 சதவிகித உழைப்பையும் பங்களிப்பையும் அணிக்காக வழங்கக்கூடியவர். 

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியிலேயே தனி ஒருவனாக தெறிக்கவிட்டார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் அபாரமாக ஆடி சிறந்த ஃபினிஷர் என பெயர் பெற்றார். ஐபிஎல்லில் செம ஃபார்முக்கு வந்தார். அது அவருக்கு உலக கோப்பையிலும் பெரியளவிலும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. உலக கோப்பையிலும் சிறப்பாகவே ஆடிவருகிறார். 

இந்நிலையில், ஐசிசிக்கு அளித்த பேட்டியில் பேசிய ஹர்திக் பாண்டியா, மூன்றரை ஆண்டுகளாக உலக கோப்பையில் ஆடும் இந்த தருணத்திற்காகத்தான் தயாராகிவந்தேன். ஜூலை 14ம் தேதி உலக கோப்பையை என் கையில் ஏந்துவது மட்டுமே எனது இலக்கு.  என் நண்பன் ஒரு புகைப்படத்தை எனக்கு பகிர்ந்தான். அது 2011 உலக கோப்பையை இந்திய அணி வென்றதை நாங்கள் கொண்டாடிய போட்டோ. 8 ஆண்டுகளுக்கு முன் உலக கோப்பை வெற்றியை கொண்டாடிய நான், இன்று உலக கோப்பையில் ஆடுகிறேன். மீண்டும் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் எனது நோக்கம் என்று பாண்டியா தெரிவித்துள்ளார். 

ஹர்திக் பாண்டியாவை பற்றி அந்த வீடியோவில் பேசிய ஜடேஜா, பாண்டிய ஒரு கேம் சேஞ்சர் எனவும் அவர் ஒரு ராக் ஸ்டார் எனவும் தாறுமாறாக புகழ்ந்தார்.