ஐபிஎல் 15வது சீசனில் தொடர் வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் குஜராத் டைட்டன்ஸ் அணி, வெற்றிகரமான அணியாக வெற்றிநடை போடுவதற்கான காரணத்தை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய சாம்பியன் அணிகள் தொடர் தோல்விகளை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் கிடக்கும் நிலையில், புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகின்றன.
குறிப்பாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மிகச்சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவருகிறது. இதுவரை 9 போட்டிகளில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டு வருகிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அனைவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
முகமது ஷமி, ஃபெர்குசன், ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால் ஆகிய சிறந்த பவுலர்களுடன் ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோரும் பந்துவீசுவார்கள் என்பதால் பவுலிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. பவுலிங்கில் பலம் என்பதால், பேட்டிங்கில் பலவீனம் என்றில்லை. பேட்டிங்கிலும், ஷுப்மன் கில், சஹா, ஹர்திக் பாண்டியா, டேவிட்மில்லர், ராகுல் டெவாட்டியா ஆகியோரில் ஒருவர் அல்லது இருவர் தேவையானபோது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடுகின்றனர்.
ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 171 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தபோதிலும், அந்த இலக்கை அடித்து வெற்றி பெற்றது. டேவிட் மில்லரும் டெவாட்டியாவும் இணைந்து வெற்றியை தேடிக்கொடுத்தனர். ஒரு அணியாக ஒவ்வொரு வீரரும் பொறுப்பை உணர்ந்து விளையாடுவதால்தான் அந்த அணி வெற்றிகளை குவித்துவருகிறது.
இந்நிலையில், ஆர்சிபிக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய ஹர்திக் பாண்டியா, குஜராத் அணியின் வெற்றி சூட்சமத்தை பகிர்ந்தார். இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, நான் மட்டும் வளரக்கூடாது; என்னுடன் சேர்ந்து எனது அணியினர் அல்லது என்னுடன் இருப்பவர்கள் என அனைவருமே வளரவேண்டும் என்று நினைப்பவன் நான். அதுதான் எங்கள் அணியின் வெற்றிக்கான காரணம். நான் கேப்டனாக இருக்கலாம். ஆனால் தலைமைக்கு கீழ் செயல்படுவது போன்ற அமைப்பு எங்கள் அணியில் இல்லை. அனைவருமே கேப்டனுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றவர்கள் தான். அனைவருமே ஒரே பாதையில் தான் பயணிக்கிறோம் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
