இந்தியா - நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து, ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர்.

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவருமே தலா 2 ரன்களில் ட்ரெண்ட் போல்ட்டின் அடுத்தடுத்த ஓவர்களில் நடையை கட்டினர். ட்ரெண்ட் போல்ட் வீசிய 2வது ஓவரின் 2வது பந்தில் ரோஹித் சர்மா எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 

இதையடுத்து தவானுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். மூன்றாவது ஓவரை டிம் சௌதி வீச, மீண்டும் ட்ரெண்ட் போல்ட் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தவான் வெளியேறினார். நான்காவது ஓவரிலேயே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 4ம் வரிசை வீரராக கேஎல் ராகுல், கோலியுடன் ஜோடி சேர்ந்தார்.

நான்காம் வரிசையில் இறங்கும் வாய்ப்பு மட்டுமல்லாமல் 4வது ஓவரிலேயே களத்திற்கு வரும் வாய்ப்பையும் பெற்ற ராகுல், பெரிய இன்னிங்ஸ் ஆட  கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிட்டு 6 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா களத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே கோலின் டி கிராண்ட் ஹோம் வீசிய 11வது ஓவரில் கோலியும் போல்டாகி வெளியேறினார். 

அதன்பின்னர் பாண்டியாவுடன் தோனி சேர்ந்தார். வழக்கமாக டெத் ஓவர்களில் வந்து ஃபினிஷிங் வேலையையே பெரும்பாலும் செய்துவந்த ஹர்திக் பாண்டியாவிற்கு 6வது ஓவரிலேயே களத்திற்கு வரும் வாய்ப்பு இந்த போட்டியில் கிடைத்தது. தான் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, சூழலுக்கு ஏற்ப களத்தில் நிலைத்து ஆடவும் தெரியும் என நிரூபிக்க ஹர்திக் பாண்டியாவிற்கு அருமையான ஒரு வாய்ப்பு இந்த போட்டியில் கிடைத்தது. 

13 ஓவர்கள் நிலைத்து ஆடிய பாண்டியா, 30 ரன்களில் ஜேம்ஸ் நீஷம் பவுலிங்கில் ஆட்டமிழந்து, பெரிய இன்னிங்ஸ் ஆட தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக், அதே ஓவரின் 4வது பந்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 81 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், தோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்த சில நிமிடங்களிலேயே தோனியும் ஆட்டமிழந்தார். தோனி 17 ரன்களில் டிம் சௌதியின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த தோனியும் ஆட்டமிழந்ததால், 91 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. அதனால் மிக மொக்கையான ஸ்கோரை இந்திய அணி, நியூசிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்போவது உறுதியாகியுள்ளது.