பிசிசிஐ தலைவர் கங்குலியின் பேச்சை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பொருட்படுத்தவில்லை. 

இந்திய அணிக்கு கபில் தேவுக்கு பிறகு கிடைத்த சிறந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டவர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அசத்தலான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்தவர் ஹர்திக் பாண்டியா.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான ஃபார்மட்டுகளுக்கான இந்திய அணியிலும் நிரந்தர இடம்பிடித்து அபாரமாக விளையாடி கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு 2018 ஆசிய கோப்பையின்போது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு பின்னரே, அவரால் பழைய மாதிரி ஆடமுடியவில்லை.

அதன்பின்னர் தொடர்ச்சியாக காயங்களை எதிர்கொண்டுவரும் பாண்டியாவால் முன்பைப்போல் பந்துவீச முடியவில்லை. அதன்விளைவாக, அவருக்கு கிரிக்கெட்டிலிருந்து சிறிய ஓய்வளித்து, அவரது முழு பவுலிங் கோட்டாவை வீசுமளவிற்கான முழு ஃபிட்னெஸை அடைவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் அவர் ஆடவில்லை. இந்த தொடர்களுக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

அவர் முழு ஃபிட்னெஸை பெற்று மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், ரஞ்சி தொடரில் விளையாடி முடிந்தவரை அதிகளவிற்கு பந்துவீச வேண்டும். அப்படி அதிகமாக பந்துவீசுவதுதான் அவர் பலமடைய வழி. அவர் நீண்டகாலம் ஆட வேண்டும் என்று விரும்புவதால்தான் இந்த சிறிய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரஞ்சி தொடரில் விளையாடி அதிகமாக பந்துவீசுவதுதான் இந்திய அணியில் இடம்பெற வழி என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.

ஆனால் ரஞ்சி தொடரில் ஹர்திக் பாண்டியா ஆடவில்லை. ரஞ்சி தொடருக்கான பரோடா அணியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெறவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலியின் பேச்சையே ஹர்திக் பாண்டியா பொருட்படுத்தவில்லை. ரஞ்சி தொடரில் பாண்டியா ஆடினால் அவரால் கண்டிப்பாக பந்துவீசமுடியும். ஆனால் ஐபிஎல்லில் ஆடவேண்டும் என்பதற்காக அவர் ரஞ்சியில் ஆடவில்லை.