இந்திய அணியில் கபில் தேவிற்கு பிறகு சிறந்த ஆல்ரவுண்டர் எனவும் அடுத்த கபில் தேவ் எனவுமளவிற்கும் பாராட்டையும் பெயரையும் பெற்றிருப்பவர் ஹர்திக் பாண்டியா. 

2016ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா, மிகக்குறுகிய காலத்திலேயே தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே தனது முழு பங்களிப்பை அளிக்கக்கூடியவர். 

இதுவரை இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 45 ஒருநாள் போட்டிகளிலும் 38 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். அண்மைக்காலமாக காயத்தால் கடும் அவதியடைந்துவரும் பாண்டியா, இந்திய அணியில் கடந்த 6 மாதங்களாக ஆடவில்லை. உலக கோப்பைக்கு பின்னர் காயத்தால் கடும் அவதிப்பட்டு, தொடர்ச்சியாக இந்திய அணிக்கு ஆடமுடியாமல் தவித்துவருகிறார் பாண்டியா. 

இந்நிலையில், நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, முழு உடற்தகுதி பெறாததால், ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தோல்வியடைந்தார். எனவே அவருக்கு பதிலாக விஜய் சங்கர் நியூசிலாந்து சென்றுள்ளார். 

இந்நிலையில், இந்தியா டுடேவிற்கு பேட்டியளித்த ஹர்திக் பாண்டியா, தான் அணிக்கு வந்த புதிதில் தோனி தனக்கு சொன்ன அறிவுரையை இன்று வரை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, நெருக்கடியான சூழல்களில் களத்தில் நீ அந்த அழுத்தத்தை உணரக்கூடாத் என்றால், ஸ்கோர் போர்டில் உனது ஸ்கோரை பார்க்காதே.. அணியின் சூழலை கருத்தில்கொண்டு அதற்கேற்ப மட்டுமே ஆடு. நீ அழுத்தத்தை உணரமாட்டாய் என்று தோனி என்னிடம் சொன்னார். உண்மையாகவே சொல்கிறேன்... இன்று வரை நான் அதை பின்பற்றிவருகிறேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.