Asianet News TamilAsianet News Tamil

அந்த ஒரு ஓவரோட என்னோட கெரியரே முடிஞ்சதுனு நெனச்சேன்! ஆனால் தோனி தான் என்னை வளர்த்துவிட்டார் - ஹர்திக் பாண்டியா

தன்னை தோனி எப்படி வளர்த்துவிட்டார் என்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
 

Hardik Pandya explains how MS Dhoni groomed him
Author
Bengaluru, First Published Jan 25, 2022, 8:56 PM IST

இந்திய அணிக்கு கபில் தேவுக்கு பிறகு கிடைத்த சிறந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டவர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அசத்தலான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்தவர் ஹர்திக் பாண்டியா.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான ஃபார்மட்டுகளுக்கான இந்திய அணியிலும் நிரந்தர இடம்பிடித்து அபாரமாக விளையாடி கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு 2018 ஆசிய கோப்பையின்போது முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு பின்னரே, அவரால் பழைய மாதிரி ஆடமுடியவில்லை.

அதன்பின்னர் தொடர்ச்சியாக காயங்களை எதிர்கொண்டுவரும் பாண்டியாவால் முன்பைப்போல் பந்துவீச முடியவில்லை. அதன்விளைவாக, அவருக்கு கிரிக்கெட்டிலிருந்து சிறிய ஓய்வளித்து, அவரது முழு பவுலிங் கோட்டாவை வீசுமளவிற்கான முழு ஃபிட்னெஸை அடைவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுவருகிறார். அவர் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் கம்பேக் கொடுத்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தனக்கு தோனி எப்படி ஆதரவாக இருந்து வளர்த்துவிட்டார் என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, நான் ஒவ்வொரு வீரரிடமிருந்தும் நிறைய விஷயங்களை கற்றிருக்கிறேன். குறிப்பாக மாஹி பாய்-இடமிருந்து (Bhai) (தோனி) நிறைய கற்றிருக்கிறேன். அவர் எனக்கு முழு சுதந்திரமளித்தார். நானே தவறுகள் செய்து அதிலிருந்து கற்றுக்கொண்டு நான் மேம்பட இடமளித்தார். 

நான் இந்திய அணியில் இடம்பிடித்த பிறகு, தோனி என்னிடம் இப்படி பந்துவீசு, அப்படி பந்துவீசு என அறிவுறுத்துவார் என நினைத்தேன். ஆனால் அவர் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை. போகப்போகத்தான் எனக்கு புரிந்தது.. அவர், நான் செய்யும் தவறுகளிலிருந்து நானே பாடம் கற்றுக்கொண்டால் தான் என்னால் கடைசிவரை நிலைத்து நீடிக்க முடியும் என்பதால், அதற்கு என்னை அனுமதித்து, அதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்பது புரிந்தது. 

நான் எனது அறிமுக போட்டியில் ஒரே ஓவரில் 22-24 ரன்களை வாரி வழங்கினேன். அதுதான் எனது முதல் மற்றும் கடைசி ஆட்டம் என நினைத்தேன். ஆனால் அடுத்த ஓவரை வீசுவதற்காக என்னை தோனி அழைத்தார். அதுமுதல் எனது கெரியரில் வளர தொடங்கினேன். அதுதான் தோனி என்றார் ஹர்திக் பாண்டியா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios