இந்தியா அணியின் ஹர்திக் பாண்டியா இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், மைதானத்திலேயே கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
குஜராத மாநிலம் சூரத்தில் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தவர் ஹர்திக் பாண்டியா. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடு வருகிறார். முதல் முறையாக 2017 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதே போன்று, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டிலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
இதுவரையில் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 532 ரன்களும், 17 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இதே போன்று 81 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1718 ரன்களும், 76 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். மேலும், 87 டி20 போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினார். தற்போது டெல்லியில் நடந்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது 30ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி மைதானத்தில் கேக் வெட்டி கௌதம் காம்பீருக்கு ஊட்டி விட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
