இந்திய அணியின் நட்சத்திர வீரரும் ஆல்ரவுண்டருமான இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கு, 2018ல் நடந்த ஆசிய கோப்பையில் முதுகில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டுவந்து அதன்பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம், ஐபிஎல், உலக கோப்பை ஆகியவற்றில் ஆடிய ஹர்திக் பாண்டியா, உலக கோப்பைக்கு பின்னர் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மீண்டும் முதுகில் காயமடைந்தார். 

இதையடுத்து அதற்காக சிகிச்சையும் ஓய்வும் பெற்றுவந்த ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் முழு உடற்தகுதியை பெறாததையடுத்து அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

ஐபிஎல் நெருங்கிவிட்ட நிலையில், அவர் ஐபிஎல்லில் ஆடுவாரா என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், டிஓய் பாட்டில் டி20 தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஆடிவரும் ஹர்திக் பாண்டியா, இதுவரை தன் கெரியரில் ஆடிராத அளவிற்கு வெறித்தனமாக பேட்டிங் ஆடிவருகிறார். 

சிஏஜி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 37 பந்தில் சதமடித்து தனது ஃபார்மையும் உடற்தகுதியையும் தேர்வுக்குழுவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் காட்டினார். 

இந்நிலையில், அதுவே பரவாயில்லை எனுமளவிற்கு அதைவிட வெறித்தனமான ஒரு இன்னிங்ஸி BPCL அணிக்கு எதிராக ஆடியுள்ளார். எதிரணி பவுலர்கள் வீசும் பந்தையெல்லாம் சிக்ஸருக்கு விரட்டினார். வெறும் 39 பந்தில் இந்த போட்டியில் சதமடித்த ஹர்திக் பாண்டியா, அடுத்த 16 பந்தில் 55 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 

அதிரடியாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்த ஹர்திக் பாண்டியா வெறும் 55 பந்தில் 20 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 158 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் ரிலையன்ஸ் ஒன் அணி 20 ஓவரில்ம் 238 ரன்களை குவித்தது.