இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான பும்ரா, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 

ஜமைக்காவில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்துள்ளது. இந்த 7 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகள் பும்ரா வீழ்த்தியது. அதில் ஹாட்ரிக்கும் அடங்கும். 

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். பும்ராவிற்கு முன்பாக 2001ல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பாண்டிங், கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே ஆகிய மூவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின்னர் 2006ல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுஃப் ஆகிய மூவரையும் அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட் போட்டார் இர்ஃபான் பதான். 

2001ல் ஹர்பஜன் சிங் வீழ்த்திய ஹாட்ரிக் விக்கெட்டின் வீடியோவை டுவிட்டரில் ஒருவர் பகிர, அதைக்கண்ட கில்கிறிஸ்ட், அப்போதெல்லாம் டி.ஆர்.எஸ் கிடையாது என்று பதிவிட்டுள்ளார். 

கில்கிறிஸ்ட் அப்படி பதிவிட்டதற்கு காரணம், ஹர்பஜனின் ஹாட்ரிக்கில் இரண்டாவது விக்கெட்டாக அவுட்டானவர் கில்கிறிஸ்ட். ஆனால் அது அவுட்டில்லை. கில்கிறிஸ்ட்டின் பேட்டில் பட்டபின்னர் தான் கால்காப்பில் பட்டது. ஆனால் அம்பயர் தவறுதலாக அவுட் கொடுத்துவிடுவார். ஆனாலும் அம்பயரின் முடிவை எதிர்க்காமல் கில்கிறிஸ்ட் அதிருப்தியுடன் சென்றுவிடுவார். அவுட் இல்லாததற்கு அவுட் கொடுத்ததால்தான் கில்கிறிஸ்ட், அப்போதெல்லாம் ரிவியூ கிடையாது என்று டுவீட் செய்துள்ளார். 

கில்கிறிஸ்ட் பொதுவாகவே அவருக்கு அவுட் என்று தெரிந்தால், அம்பயர் கொடுக்காவிட்டாலும் கூட நடையை கட்டிவிடுவார். அதேபோல, அவுட் இல்லாததற்கு அம்பயர் கொடுத்தாலும், அதுகுறித்து வாதமெல்லாம் செய்யாமல் டீசண்ட்டாக சென்றுவிடுவார்.