சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய ஹர்பஜன் சிங், அதன்பின்னர் தோனி கேப்டன்சியிலும் பிரைம் ஸ்பின்னராக திகழ்ந்தார். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டு ஐசிசி கோப்பைகளையும் வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர் ஹர்பஜன் சிங்.

இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டூகளையும் 28 டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2000ம்களில் இந்திய அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், அஷ்வின் வருகைக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டார். 2016ம் ஆண்டுக்கு பிறகு அவர் இந்திய அணியில் ஆடவேயில்லை. 

ஆனால் ஐபிஎல்லில் கடந்த சீசன் வரை அசத்தலாக வீசிய ஹர்பஜன் சிங், ஐபிஎல்லால் சிறப்பாக ஆடும் தன்னால் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடமுடியும் என நம்புகிறார். 

இதுதொடர்பாக பேசிய ஹர்பஜன் சிங், நான் ஐபிஎல்லில் நன்றாக பந்துவீசுகிறேன் எனும்போது, சர்வதேச போட்டியிலும் நன்றாக வீசமுடியும். ஏனெனில் ஐபிஎல்லில் பந்துவீசுவது கடினம். மைதானங்கள் சிறியவை; சிறந்த சர்வதேச வீரர்கள் அனைவரும் ஐபிஎல்லில் ஆடுகின்றனர். பவுலிங்கிற்கு மிகவும் சவாலான ஐபிஎல்லில் நான் நன்ற்ராக வீசுகிறேன் என்றால், கண்டிப்பாக சர்வதேச போட்டியிலும் நன்றாக வீச முடியும். ஆனால் தேர்வாளர்கள் எனக்கு அதிக வயதாகிவிட்டதாக நினைத்து என்னை பரிசீலிப்பதில்லை.

மேலும் நான் உள்நாட்டு போட்டிகளில் ஆடுவதில்லை. ஆனால் ஐபிஎல்லில் நான் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறேன் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஐபிஎல்லில் எனது ரெக்கார்டே அதற்கு சான்று. ஐபிஎல்லில் பந்துவீசுவது பவுலர்களுக்கு மிகவும் சவாலான விஷயம். ஐபிஎல்லில் பவர்ப்ளே மற்றும் மிடில் ஓவர்களில் சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறேன். தரமான வீரர்களுக்கு எதிராக நன்றாக வீசி விக்கெட் எடுக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் சிறந்த வீரர்களை பெற்றிருக்கவில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்லில் 10 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் 2 சீசன்கள் சிஎஸ்கேவிலும் ஆடியுள்ள ஹர்பஜன் சிங், மொத்தமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுதான் ஐபிஎல்லில் மூன்றாவது அதிகபட்ச விக்கெட்டுகள். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடுவதை வைத்து டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்காக இப்படி பேசியுள்ளார் ஹர்பஜன் சிங்.