இதுக்கும் மேல அந்த பசங்க என்ன செய்தால் டீம்ல எடுப்பீங்க? இந்திய அணி தேர்வாளர்களை கடுமையாக விளாசிய ஹர்பஜன் சிங்
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய வீரர்களை இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிகளில் எடுக்காததால் கடும் அதிருப்தியடைந்த ஹர்பஜன் சிங், இந்திய அணி தேர்வாளர்களை கடுமையாக விளாசியுள்ளார்.
ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக ஆடுவதன் அடிப்படையில் இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்த காலம் போய், தற்போது ஐபிஎல்லில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே இந்திய அணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஐபிஎல்லில் ஆட வாய்ப்பே கிடைக்காத பல வீரர்கள், ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பதில்லை.
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் டி20 தொடருக்கான, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதேபோல தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணியும் அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், ரவிசந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்தியா ஏ அணி:
பிரியங்க் பன்சால் (கேப்டன்), பிரித்வி ஷா, அபிமன்யூ ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், சர்ஃபராஸ் கான், பாபா அபரஜித், உபேந்திரா யாதவ், கிருஷ்ணப்பா கௌதம், ராகுல் சாஹர், சௌரப் குமார், நவ்தீப் சைனி, உம்ரான் மாலிக், இஷான் போரெல், அர்ஸான் நாக்வஸ்வல்லா.
இந்த அணிகளில் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் ஷெல்டான் ஜாக்சன் மற்றும் மந்தீப் சிங் ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்காததால் கடும் அதிருப்தியடைந்த ஹர்பஜன் சிங், இந்திய அணி தேர்வாளர்களை கடுமையாக விளாசியுள்ளார்.
இதுதொடர்பாக டுவீட் செய்துள்ள ஹர்பஜன் சிங், 2018/19 ரஞ்சி தொடரில் 854 ரன்களையும், 2019/20 ரஞ்சி தொடரில் 809 ரன்களையும் குவித்த வீரர் ஷெல்டான் ஜாக்சன். ரஞ்சி சாம்பியனான ஜாக்சன், தற்போது செம ஃபார்மில் இருக்கிறார். ஆனாலும் இந்தியா ஏ அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம்பெற இதைவிட அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும் என்று தேர்வாளர்கள் கூறினால் நன்றாக இருக்கும் என ஹர்பஜன் சிங் விளாசியுள்ளார்.
மேலும் மந்தீப் சிங்கை இந்திய அணியில் எடுக்காதது குறித்து பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், மற்றொரு டாப் பிளேயர் மந்தீப் சிங். அவரை இந்திய அணியில் கூட வேண்டாம்; இந்தியா ஏ அணியில் கூட எடுக்க மறந்துவிட்டார்கள். தேர்வாளர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை தொடர்ச்சியாக உற்று கவனிக்க வேண்டும். ரஞ்சி தொடர்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று மந்தீப் சிங்கின் புள்ளிவிவரங்களுடன் பதிவிட்டு விளாசியுள்ளார் ஹர்பஜன் சிங்.