ரிக்கி பாண்டிங் தனது பந்தில் அதிகமுறை அவுட்டானது குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், கங்குலி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர். சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே ஆகிய சிறந்த வீரர்களுடன் இணைந்து ஆடியவர். ரிக்கி பாண்டிங்  தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கோலோச்சிய காலக்கட்டத்தில், அந்த அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங்கிற்கு 2001 ஆஸ்திரேலிய தொடர் மிக முக்கியமானது. 2001ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அந்த தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. அந்த தொடரின் தொடர் நாயகன் இளம் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். அந்த தொடரில் தான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த தொடர் தான் ஹர்பஜன் சிங்கின் கெரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் அணியில் நிரந்தர இடம்பிடித்தார். 

அந்த தொடரில் ரிக்கி பாண்டிங் பேட்டிங் ஆடிய 5 இன்னிங்ஸ்களிலுமே அவரை ஹர்பஜன் சிங் தான் வீழ்த்தினார். அத்தொடரில் 3 இன்னிங்ஸில் பாண்டிங் டக் அவுட். மற்ற இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 17 ரன்கள் மட்டுமே அடித்தார். ரிக்கி பாண்டிங்கின் கெரியரில் அவருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த 3வது வீரர் பாண்டிங். ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான பாண்டிங்,  இந்தியாவில் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்தியாவில் அவரது பேட்டிங் சராசரி வெறும் 26.48 ஆகும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஒட்டுமொத்த சராசரி 51.85. அவரது கெரியர் முழுக்கவே இந்தியாவில் சரியாக ஆடியதில்லை. 

அதற்கு காரணம் ஹர்பஜன் சிங். ஹர்பஜன் சிங் என்றாலே ரிக்கி பாண்டிங்கிற்கு பயம் என்பதை அவரே தெரிவித்துள்ளார். தனது கெரியரில் தனக்கு சிம்மசொப்பனமாக இருந்த பவுலர் ஹர்பஜன் சிங் தான் என்று பாண்டிங்கே கூறியிருக்கிறார். 

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் பேசிய ஹர்பஜன் சிங், 2001 டெஸ்ட் தொடருக்கு பிறகு, ரிக்கி பாண்டிங் எனது பந்தை பார்ப்பதேயில்லை. பந்தை பார்க்காமல், எனது முகத்தை பார்த்தவுடனே அவுட்டாகி சென்றார். அவர் அருமையான பேட்ஸ்மேன். அவர் பந்தை பார்த்து ஆடினால், அவரை எந்த பவுலராலும் அதிகமுறை வீழ்த்தமுடியாது. எனது பவுலிங்கை பார்க்காமல், நான் பந்துவீச வந்ததும் எனது முகத்தை பார்த்தே அவுட்டானதுதான் அதிகம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.