தோனி தலைமையிலான இந்திய அணி, டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றது. 2007ல் தோனி இந்திய அணியின் கேப்டனான உடனேயே, அவரது தலைமையில் டி20 உலக கோப்பையில் ஆடிய இளம் இந்திய அணி அந்த உலக கோப்பையை வென்றது. அது இந்திய அணிக்கு பெரிய உத்வேகமாக அமைந்தது. 

அதன்பின்னர் 2011ல் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த இரண்டு உலக கோப்பை தொடர்களிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக திகழ்ந்த வீரர் யுவராஜ் சிங். 

2007 டி20  உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி மிரட்டிய யுவராஜ் சிங், அந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினார். 

அதேபோல 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில், தொடர் முழுவதுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பான பங்களிப்பை செய்து கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். அந்த உலக கோப்பையில் 362 ரன்களையும் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார் யுவராஜ் சிங்.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மிடில் ஆர்டரில் வலு சேர்த்தவர் யுவராஜ் சிங். அவர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு, அவரது இடத்தை இதுவரை யாராலும் இதுவரை நிரப்ப முடியவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர், இப்போதுதான் கடந்த சில தொடர்களாக நம்பிக்கையளித்துவருகிறார். ஆனாலும் யுவராஜ் சிங், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கைதேர்ந்தவர். 

யுவராஜ் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், அவர் இல்லாமல் இந்திய அணி அந்த 2 உலக கோப்பைகளையும் வென்றிருக்க முடியாது என ஹர்பஜன் சிங் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், உலக கோப்பை பற்றி பேசினால், யுவராஜ் சிங்கை விட்டுவிட்டு பேச முடியாது. உலக கோப்பையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார். பொதுவாக அனைவருமே சச்சின், கங்குலி, கும்ப்ளே, கபில் தேவ் ஆகியோரை பற்றி பேசுகிறார்கள். ஆனால், யுவராஜ் சிங்கை பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை. யுவராஜ் சிங் இல்லாமல் 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டு உலக கோப்பைகளையும் இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பேயில்லை. 

2 உலக கோப்பைகளையும் வென்றதற்கு யுவராஜ் சிங் தான் முக்கிய காரணம். நன்றி யுவராஜ். யுவராஜ் சிங் அணியில் இல்லையென்றால், அரையிறுதி வரை சென்றிருப்போம். ஆனால் கோப்பையை வென்றிருப்போமா என்று தெரியவில்லை. நல்ல அணிகள் எப்போதுமே அரையிறுதிக்கு முன்னேறும். 2019 உலக கோப்பையில் கூட அரையிறுதி வரை சென்றோம். ஆனால் கோப்பையை வெல்வதற்கு யுவராஜ் சிங் மாதிரியான வீரர் அணியில் தேவை. யுவராஜை அணியில் பெற்றது நமது அதிர்ஷ்டம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.