ரிக்கி பாண்டிங்கின் கெரியரில் அவருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த ஹர்பஜன் சிங், பாண்டிங்குடனான ஒரு தரமான சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

ஹர்பஜன் சிங் 1998ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடினார். 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளையும் 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னராக 15 ஆண்டுகள் திகழ்ந்தார். 

2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர் ஹர்பஜன் சிங். ஹர்பஜன் சிங்கின் கெரியரில், அப்போதைய காலக்கட்டத்தில் தலைசிறந்து விளங்கிய ஆஸ்திரேலிய அணிக்கும் அதன் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்து, தெறிக்கவிட்டதுதான் தரமான சம்பவம். 

ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கோலோச்சிய காலத்தில், ஸ்லெட்ஜிங்கிலும் சரி, ஆட்டத்திலும் சரி கடும் சவாலாக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். 2001 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் வீழ்த்திய ஹர்பஜன் சிங், அந்த தொடரில் ரிக்கி பாண்டிங் ஆடிய 5 இன்னிங்ஸ்களிலுமே அவரை அவுட்டாக்கியவர் ஹர்பஜன் சிங். 5 இன்னிங்ஸ்களில் சேர்த்தே 17 ரன்கள் மட்டுமே அடித்தார் பாண்டிங். அதன்பின்னர் 2003-04 தொடரிலும், ஒருநாள் தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணிக்கும் பாண்டிங்கிற்கும் சவாலாக இருந்தவர் ஹர்பஜன் சிங். 

தான் எதிர்கொண்டதிலேயே, ஹர்பஜன் சிங் தான் மிகக்கடினமான பவுலர் என்று ரிக்கி பாண்டிங்கே கூறியிருக்கிறார். இந்நிலையில், ரிக்கி பாண்டிங்கை முதல் முறையாக அவுட்டாக்கியபோது நடந்த சம்பவத்தை ஹர்பஜன் சிங் விளக்கியுள்ளார். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் பாண்டிங் குறித்து பேசிய ஹர்பஜன் சிங், முதல் முறை ரிக்கி பாண்டிங்கை ஷார்ஜாவில் அவுட்டாக்கினேன். அப்போது எனக்கு ஆங்கிலம் அந்தளவிற்கு வராது. அதனால் அனைவரும் சகஜமாக பயன்படுத்திய ஒரு வார்த்தையை, அவரை அவுட்டாக்கியதும் அவரிடம் சொன்னேன். அவரை அவுட்டாக்கிவிட்டு ஸ்லெட்ஜிங் செய்தேன். அதனால் கடுப்பான ரிக்கி பாண்டிங், பேட்டுடன் வேகமாக என்னை நோக்கி வந்தார். உண்மையாகவே என்னை அடிக்கத்தான் போகிறார் என்று பயந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்காக ஒரு போட்டியில் எனக்கு தடை விதிக்கப்பட்டது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.