இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், 1998லிருந்து 2015ம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடினார். இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளையும் 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

2007ல் டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 உலக கோப்பைகளையும் வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர் ஹர்பஜன் சிங். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய காலத்திலேயே அந்த அணியை தனது சுழற்பந்துவீச்சால் தெறிக்கவிட்டவர் ஹர்பஜன் சிங். 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ஹர்பஜன் சிங், ஐபிஎல்லில் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணியில் ஆடுவதால் தமிழ்நாட்டின் முக்கியமான விழாக்களுக்கு வாழ்த்துக்களையும் தமிழ்நாட்டின் சமூக பிரச்னைகள் குறித்த தனது கருத்தையும், சர்ச்சைகளுக்கு கண்டனத்தையும் தெரிவிப்பது என, தமிழ் மக்களின் அன்பை பெற்றுவருகிறார். தமிழ்நாடு  சார்ந்து மட்டுமல்லாது பொதுவாகவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டுவருகிறார் ஹர்பஜன் சிங். 

அந்தவகையில், இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால், தனது டுவிட்டர் பக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்து குறிப்பில், தவறுதலாக முருகக்கடவுள் படத்தை பதிவிட்டுவிட்டார். சீக்கியரான அவருக்கு, இந்து கடவுள்கள் குறித்து தெளிவாக தெரிந்திருக்காது. அதனால் தவறுதலாக போட்டுவிட்டார். மதங்களை கடந்து, வாழ்த்து சொல்லும் அந்த நல்ல மனதையும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் அவரது செயலையும் பாராட்டாமல், சிலர், கிருஷ்ணர் படத்திற்கு பதிலாக முருகன் படத்தை பதிவிட்டத்தை நக்கலடித்து பதிவுகள் போட்டார்கள். 

 

அப்படி தனது பதிவை நக்கலும் நையாண்டியும் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். தன்னை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து பதிவிட்ட டுவீட்டில், உங்கள் மனதில் கடவுளின் உருவம் குறித்த தவறான புரிதல் இருக்கிறது. கடவுள் ஒருவர் தான். உள்ளே இருக்கும் அவர், எப்படியிருந்தாலும் உங்களால் பார்க்கமுடியும். எனவே அடுத்தவர்களை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள். உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கையிருந்தால், எல்லா இடங்களிலும் எல்லா உருவங்களிலும் உங்களுக்கு கடவுள் தெரிவார் என்று ஹர்பஜன் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.