2018-2019 ஆஸி., சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. அந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது புஜாரா தான். அந்த தொடரில் 3 சதங்களை அடித்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல உதவினார்.

அதேபோல, அண்மையில் நடந்து முடிந்த ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லவும் புஜாரா முக்கிய காரணம். இந்த முறை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும், 3 அரைசதங்களை அடித்தார் புஜாரா. அந்த 3 அரைசதங்களுமே முக்கியமான கட்டத்தில் அடிக்கப்பட்டவை. புஜாரா ஒருமுனையில் நங்கூரத்தை போட்டு நிலைத்து நின்றதால் தான், சிட்னி மற்றும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ரிஷப் பண்ட், ஷுப்மன் கில் ஆகியோர் அடித்து ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடிந்தது.

இந்நிலையில், புஜாரா குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், ஆஸி.,க்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடினார் புஜாரா. அவரது அரைசதங்கள் முக்கியமானவை. ஒருமுனையில் அவர் நிலைத்து நின்று ஆடியதால் தான், மறுமுனையில் மற்ற வீரர்கள் அவர்களது இயல்பான ஆட்டத்தை ஆட முடிந்தது. என்னுடைய ஆல்டைம் லெவனில் எப்போதுமே புஜாராவுக்கு இடம் உண்டு. புஜாரா களத்தில் நின்றால், எப்பேர்ப்பட்ட இலக்கையும் அடித்துவிட முடியும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.