ஐபிஎல் 13வது சீசனில் மிகச்சிறப்பாக ஆடி, இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கவேண்டும் என்ற குரல்களை பெரும் ஜாம்பவான்களே எழுப்புமளவிற்கு ஆடியவர் சூர்யகுமார் யாதவ். கடந்த சில ஐபிஎல் சீசன்களிலும் சரி, உள்நாட்டு போட்டிகளிலும் சரி தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியும் கூட, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது.

நடந்து முடிந்த சீசனில், ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. அதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் சூர்யகுமார் யாதவ். இந்த சீசனில் 16 போட்டிகளில் 145.01 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 480 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவுக்கு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. அதற்கு பெரும்பாலான முன்னாள் ஜாம்பவான்கள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். 

சூர்யகுமாருக்கு ஆதரவாக அப்படி குரல் கொடுத்தவர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், சூர்யகுமார் யாதவ் இந்தியாவின் டிவில்லியர்ஸ் என்று புகழ்ந்துள்ளார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடவல்ல டிவில்லியர்ஸ், மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் நிலையில், இந்தியாவின் மிஸ்டர் 360 என்று ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸின் கேம் சேஞ்சராக இருந்து மிகப்பெரிய மேட்ச் வின்னராக உயர்ந்தவர். மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரில் மிகப்பெரிய பொறுப்பை சுமக்கும் வீரராக சூர்யகுமார் திகழ்கிறார். முதல் பந்திலிருந்தே அடித்து ஆட திறமை பெற்றவர் சூர்யகுமார். எல்லா விதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடிய சூர்யகுமார் யாதவின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துவது மிகக்கடினம். ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என அனைத்துவிதமான பவுலிங்கையும் திறம்பட ஆடவல்லவர். இந்தியாவின் டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.