உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தனது கனவு உலக கோப்பை அணிக்கு தோனி தான் கேப்டன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. தோனி கேப்டன்சியிலிருந்து விலகி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் ஆடிவருகிறார். 

கேப்டன் கோலியாக இருந்தாலும், முக்கியமான மற்றும் இக்கட்டான தருணங்களில் ஆலோசனை வழங்குவது தோனிதான். தோனியை கலந்து ஆலோசித்துத்தான் கேப்டன் கோலி செயல்படுகிறார்.  கேப்டன் கோலிக்கு மட்டுமல்லாமல் பவுலர்களுக்கும் முக்கியமான ஆலோசனைகளை வழங்கி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திவிடுவார் தோனி. 

தோனியின் அனுபவ ஆலோசனையும் முதிர்ச்சியான ஆட்டமும் இந்திய அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலக கோப்பை நடந்துவரும் நிலையில், பல முன்னாள் வீரர்கள் தங்களது கனவு உலக கோப்பை அணியை தேர்வு செய்து அறிவித்துவருகின்றனர். அந்தவகையில், தனது கனவு உலக கோப்பை அணிக்கு தோனி தான் கேப்டன் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இந்தியா டுடேவிற்கு பேசியுள்ள ஹர்பஜன் சிங், எனது கனவு உலக கோப்பை அணிக்கு தோனி தான் கேப்டன். கங்குலிக்கு அடுத்து இந்த கிரிக்கெட் உலகம் கண்ட சிறந்த கேப்டன் தோனி தான். தற்போது தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும் அவரளவிற்கு ஸ்மார்ட்டான கேப்டன் யாருமே கிடையாது. தோனியின் தலைமையின் கீழ் சிஎஸ்கே அணியில் இரண்டு சீசன்கள் ஆடியுள்ளேன். போட்டியின் மீது அவருக்கு இருக்கும் புரிதல் அபாரமானது என்று தோனியின் கேப்டன்சியை புகழ்ந்தார் ஹர்பஜன் சிங்.