வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகளையும் படைத்துள்ளது. 318 ரன்கள் வித்தியாசம் என்பது சாதாரண வெற்றி அல்ல; கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி. 

இந்த போட்டிக்கான அணி தேர்வு கடும் சர்ச்சைக்குள்ளானது. ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்த்தும் கூட, ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்காதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித் புறக்கணிக்கப்பட்டது தவறு என்றும் அவரை கண்டிப்பாக அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்றும் கருத்து கூறினர். ஆனால், அவருக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ஹனுமா விஹாரி சிறப்பாக ஆடி மீண்டும் ஒருமுறை தனது முத்திரையை பதித்தார். 

ரோஹித்தின் புறக்கணிப்பைப்போல, கடும் விமர்சனங்களை சந்தித்த மற்றொரு புறக்கணிப்பு அஷ்வினுடையது. இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை ஸ்பின்னரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்துள்ளவருமான அஷ்வினின் புறக்கணிப்பு முன்னாள் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாகவே இருந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் நல்ல ரெக்கார்டை வைத்துள்ளவர் அஷ்வின். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 60 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதோடு, 4 சதங்களையும் விளாசியுள்ளார் அஷ்வின். அப்படிப்பட்ட அஷ்வினை ஓரங்கட்டிவிட்டு ஜடேஜா அணியில் எடுக்கப்பட்டிருந்தார். ஜடேஜா நல்ல வீரர் தான் என்றாலும், அஷ்வின் ஓரங்கட்டப்பட்டதை நியாயப்படுத்துவதற்கு சரியான காரணமே இல்லை. டீம் காம்பினேஷன் என்ற ஒற்றை வார்த்தையை பொதுவாக பயன்படுத்தி, அணியில் தேவையில்லாத மாற்றங்களும் தேர்வுகளும் அவ்வப்போது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன. 

அஷ்வினை அணியில் எடுக்காதது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக வர்ணனையிலேயே தெரிவித்தார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர். கோலிக்கும் அஷ்வினுக்கும் தனிப்பட்ட முறையில் ஒத்துவராது என்பதாலேயே ஓரங்கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டுமல்லாமல் வாய்ப்பே இல்லாதபோதும் அஷ்வினை தூற்றும் ஹர்பஜன் சிங், இந்த வாய்ப்பை சும்மா விடுவாரா..? அஷ்வினை மட்டம் தட்டும் வகையில் மீண்டும் பேசியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஷ்வின் சேர்க்கப்படாதது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், அஷ்வின் வெளிநாட்டு தொடர்களில் சரியாக ஆடியதில்லை. எடுத்துக்காட்டுக்கு பார்த்தோமேயானால், கடந்த ஆண்டு சவுத்தாம்ப்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மொயின் அலி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அந்த போட்டியில் அஷ்வின் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். 

அதேபோல ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் முதல் டெஸ்ட் போட்டியிலேயே காயமடைந்தார் அஷ்வின். அதன்பின்னர் அவர் உடற்தகுதி பெற்றுவிடுவார் என நம்பி, அவரை அணியிலேயே வைத்திருந்தது அணி நிர்வாகம். ஆனால் அவர் உடற்தகுதியே பெறவில்லை. இவையனைத்தையும் கருத்தில் கொண்டுதான், ஆடும் லெவன் உறுதி செய்யப்படும். இவையெல்லாம்தான் அஷ்வின் ஓரங்கட்டப்பட்டதற்கு காரணம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.