இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றுவிட்டது. 

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர்களான அஷ்வின் - ஜடேஜா ஜோடியை ஓரங்கட்டி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் குல்தீப் - சாஹல் ஜோடி அந்த இடத்தை பிடித்தது. 

ஆல்ரவுண்டர் என்ற வகையில் அனைத்து வகையிலும் அசத்தக்கூடியவர் என்பதால் ஜடேஜா மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்து உலக கோப்பையிலும் ஆடினார். ஆனால் அஷ்வின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்டார். டெஸ்ட் அணியில் மட்டுமே அஷ்வின் ஆடிவருகிறார். 

இந்நிலையில், வழக்கமாக அஷ்வினை சீண்டுவதையோ அல்லது மட்டம் தட்டுவதையோ தனது கடமையாக எண்ணி செய்துவரும் ஹர்பஜன் சிங், தற்போதும் அதை செய்ய தவறவில்லை. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஸ்பின் ஜோடி குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேசிய ஹர்பஜன் சிங்,  தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் பார்த்தால் என்னுடைய நம்பர் 1 ஸ்பின்னர் தேர்வு என்பது கண்டிப்பாக குல்தீப் யாதவ் தான். அவர் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அபாரமாக வீசுகிறார். 

ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் ஆட கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி அசத்துகிறார். அஷ்வினை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக எடுப்பதென்றால் அதற்கு ஒரேயொரு காரணம், அவர் அந்த அணிக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார். அதுமட்டும்தான் அஷ்வினுக்கு சாதகமான விஷயம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

ஹர்பஜன் சிங் ஏற்கனவே அஷ்வினை விமர்சித்திருந்த போது, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரோக் எஞ்சினியர், ஹர்பஜன் செய்தது தவறு என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்திய அணியில் ஹர்பஜனின் இடத்தை நிரப்பியவர் அஷ்வின். அப்படியிருக்கையில், அஷ்வினை ஹர்பஜன் விமர்சிப்பது, ரிஷப் பண்ட்டை தோனி விமர்சிப்பது போன்றது என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆனாலும் ஹர்பஜன் சிங், அஷ்வினை மட்டம் தட்டுவதை நிறுவத்தேயில்லை.