வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார் ஹனுமா விஹாரி. 

சீனியர் வீரரான ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த போதும் கூட, ஹனுமா விஹாரிக்குத்தான் ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. அந்த வாய்ப்பை நழுவவிடாமல் அபாரமாக ஆடி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் ஹனுமா விஹாரி. 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஹனுமா விஹாரி, சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக ஆடினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை இறுகப்பிடித்துவிட்டார். 

ரோஹித் - விஹாரி இருவரில் யார் அணியில் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விஹாரிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதனால் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தனது திறமையை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்த ஹனுமா விஹாரி, முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 93 ரன்களில் அவுட்டாகி, 7 ரன்களில் சதத்தை தவறவிடார். இந்நிலையில், இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி தனது முதல் சதத்தை அடித்துவிட்டார். 

7 விக்கெட்டுகள் விழுந்த பிறகு, ஹனுமா விஹாரிக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய இஷாந்த் சர்மாவும் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 112 ரன்களை குவித்தனர். விஹாரி - இஷாந்த் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால்தான் இந்திய அணி 400 ரன்களை கடக்க முடிந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. பும்ராவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. 

இரண்டாம் நாள் ஆட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹனுமா விஹாரி, நான் 42 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டுமே என்ற நினைப்பிலேயே எனது தூக்கமே கெட்டுவிட்டது. ஒருவழியாக சதமடித்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. நான் சதமடித்ததற்கான கிரெடிட் இஷாந்த் சர்மாவுக்கும் சேரும். அவர் அபாரமாக பேட்டிங் ஆடினார். அவர் இல்லாமல் எனது சதம் சாத்தியமில்லை. 

நானும் இஷாந்த் சர்மாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினோம். அந்த சூழலில் பவுலர்களின் திட்டம் என்னவாக இருக்கும் என்று ஆலோசித்து ஆடினோம். இஷாந்த் சர்மா அவரது அனுபவத்தில் இருந்து நிறைய விஷயங்களை சொன்னார். அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. என் மீதான அழுத்தத்தையும் குறைத்தது. எனது முதல் சதத்தை அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் வெஸ்ட் இண்டீஸ் கண்டிஷனில் அடித்தது மிக மகிழ்ச்சி. இந்த சதம் எனக்கு திருப்தியளித்துள்ளது. நான் தொடர்ந்து வெளிநாடுகளிலேயே ஆடிவருகிறேன். வெளிநாட்டு கண்டிஷன்களில் ஆடுவது மிகவும் சவாலான விஷயம். ஆனால் அந்த சவாலை நான் சந்தோஷமாக எதிர்கொள்கிறேன் என்று ஹனுமா விஹாரி தெரிவித்தார்.