வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார் ஹனுமா விஹாரி. 

சீனியர் வீரரான ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த போதும் கூட, ஹனுமா விஹாரிக்குத்தான் ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. அந்த வாய்ப்பை நழுவவிடாமல் அபாரமாக ஆடி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார் ஹனுமா விஹாரி. 

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஹனுமா விஹாரி, சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக ஆடினார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை நறுக்குனு பிடித்துவிட்டார். 

ரோஹித் - விஹாரி இருவரில் யார் அணியில் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், விஹாரிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதனால் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தனது திறமையை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்த ஹனுமா விஹாரி, முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 93 ரன்களில் அவுட்டாகி, 7 ரன்களில் சதத்தை தவறவிடார். இந்நிலையில், இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி தனது முதல் சதத்தை அடித்துவிட்டார். 

7வது விக்கெட்டுக்கு பிறகு ஹனுமா விஹாரி - இஷாந்த் சர்மா ஜோடியின் பொறுப்பான பேட்டிங்கால் தான் இந்திய அணி 400 ரன்களை கடந்தது. ஹனுமா விஹாரி தனது முதல் சதத்தையும் இஷாந்த் சர்மா தனது முதல் அரைசதத்தையும் அடித்தனர். இவர்களது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. பும்ராவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. 

இரண்டாம் நாள் ஆட்டத்துக்கு பின்னர் பேசிய ஹனுமா விஹாரி, ஆறாம் வரிசையில் பேட்டிங் ஆடுவது அவ்வளவு ஈசியான காரியம் அல்ல. ஆறாம் வரிசை வீரர் எப்போதுமே பாசிட்டிவாக இருக்க வேண்டும். ஆறாம் வரிசை வீரர் இறங்கிய பின், ஒரு விக்கெட் விழுந்தால், அதன்பின்னர் விக்கெட் கீப்பர் மற்றும் பவுலர்கள் மட்டுமே இருப்பார்கள். எனவே மனநிலை எப்போதுமே பாசிட்டிவாக இருக்க வேண்டும். நான் பாசிட்டிவான மனநிலை கொண்டவன் என்பதால் என்னால் அந்த வரிசையில் நன்றாக ஆடமுடிகிறது என்று விஹாரி தெரிவித்தார். 

விஹாரி நன்றாக ஆடிவருவதால், ரோஹித்துக்கான டெஸ்ட் வாய்ப்பு மீண்டும் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், ஆறாம் வரிசை பேட்ஸ்மேன் பாசிட்டிவான ஆளாக இருக்க வேண்டும் எனவும் அது நான் தான் எனவும் விஹாரி கூறியிருக்கிறார்.