வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியதுடன் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்து டெஸ்ட் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார் ஹனுமா விஹாரி. 

ஹனுமா விஹாரி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே நன்றாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணங்களில் இடம்பெற்று ஆடினார் ஹனுமா விஹாரி. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றிருந்தும் கூட, ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படாமல் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஹனுமா விஹாரியை ஆடவைத்ததை யாரும் விமர்சிக்கவில்லை என்றாலும், ரோஹித் சர்மா புறக்கணிப்பிற்கு கவாஸ்கர், கங்குலி, அசாருதீன், கம்பீர் உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

ஹனுமா விஹாரி அபாரமான பேட்டிங்கின் மூலம் தனது தேர்வை நியாயப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹனுமா விஹாரி அபாரமாக ஆடி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். பொறுப்பற்றத்தனமாக ஆடாமல், பொறுப்புடன் முதிர்ச்சியான ஆட்டத்தை ஆடினார். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தை நெருங்கிய விஹாரி, 93 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனால் இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்து 111 ரன்களை குவித்தார். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதன் விளைவாக டெஸ்ட் அணியில் தனது இடத்தை இறுகப்பிடித்துவிட்டார். 

இந்நிலையில், டைம்ஸ் நவ் இணையதளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், 6ம் வரிசையில் இறங்குவது மிகவும் சவாலான காரியம். பேட்ஸ்மேன்கள் நல்ல நிலையில் விட்டுச்சென்றால், அதை அப்படியே தொடர்ந்து மெகா ஸ்கோரை எட்ட உதவவேண்டும். ஒருவேளை முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டால், டெயிலெண்டர்களுடன் இணைந்து அணியை காப்பாற்ற வேண்டும். அந்தவகையில், ரஹானேவுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினீர்கள், இஷாந்த்துடனும் பார்ட்னர்ஷிப் அமைத்தீர்கள். இந்த சவால் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஹனுமா விஹாரி, பேட்ஸ்மேன்களுடன் இணைந்து ஆடும்போது இன்னிங்ஸை நிதானமாக பில்ட் செய்வதற்கான நேரமும் வாய்ப்பும் இருக்கும். ஆனால் டெயில் எண்டர்களுடன் ஆடும்போது, அவர்களது விக்கெட்டும் விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரன்களையும் சேர்க்க வேண்டும். அதனால் அது பெரும் சவாலாகத்தான் இருக்கும். ஆனால் இஷாந்த் சர்மாவுடன் ஆடும்போது எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஏனெனில் அவர் சிறப்பாக பேட்டிங் ஆடியதால் அவரது விக்கெட்டை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதேநேரத்தில் அணி நல்ல நிலையில் இருக்கும்போது களமிறங்க நேரிட்டால், அந்த முமெண்ட்டை சிதைத்துவிடாமல், நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டும் என்று ஹனுமா விஹாரி தெரிவித்தார்.