இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. கடந்த 30ம் தேதி தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, விராட் கோலி - மயன்க் அகர்வாலின் அரைசதத்தால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்திருந்தது. ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்ட்டும் களத்தில் நின்றனர். 

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விஹாரியுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, தனது விக்கெட்டை இழந்துவிடாமல் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன், நிதானமாக ஆடினார். ஆனாலும் அவரால் நிலைக்கமுடியவில்லை. ஜடேஜா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ஹனுமா விஹாரியுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா, நேர்த்தியாக பேட்டிங் ஆடினார். ஒருமுனையில் இஷாந்த் சர்மா விக்கெட்டை இழந்துவிடாமல் ஆட, மறுமுனையில் ஹனுமா விஹாரி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய இஷாந்த் சர்மா, அரைசதம் அடித்தார். 80 பந்துகளில் 57 ரன்கள் அடித்து இஷாந்த் சர்மா ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷமி டக் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக ஹனுமா விஹாரி 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை தனது வேகத்தில் தெறிக்கவிட்டார் பும்ரா. பும்ராவின் நேர்த்தியான துல்லியமான ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் காம்ப்பெல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டை ஏழாவது ஓவரில் வீழ்த்திய பும்ரா, 9வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். டேரன் பிராவோ 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ப்ரூக்ஸும் சேஸும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிராவோ, ப்ரூக்ஸ், சேஸ் ஆகிய மூவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் பும்ரா. மற்றொரு தொடக்க வீரர் பிராத்வெயிட்டையும் 10 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் பும்ரா. 

அதன்பின்னர் ஓரளவிற்கு நிலைத்து ஆடி 34 ரன்கள் அடித்த ஹெட்மயரை ஷமி அவுட்டாக்கினார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரையும் பும்ராவே வீழ்த்தினார். இதையடுத்து ஹாமில்டனும் கார்ன்வாலும் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ்  அணி 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி அதிகபட்சம் 140 ரன்கள் ரன்கள் அடித்தால் கூட, இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு மேல் பின் தங்கியிருக்கும். எனவே இந்த இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.