உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கப்டில், வழக்கம்போல எடுத்த எடுப்பிலேயே விக்கெட்டை பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து கவனமாக தொடங்கினார். ஆனால் கிடைத்த நல்ல ஸ்டார்ட்டை பயன்படுத்தி கொள்ளாமல் அவுட்டானார்.  

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்  நடந்துவருகிறது. இந்த போட்டியில் முக்கியமான டாஸை வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் நிகோல்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். இந்த உலக கோப்பை தொடர் முழுவதுமே நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி கொஞ்சம் கூட நன்றாக ஆடவில்லை; படுமோசமாகவே ஆடியுள்ளனர். நியூசிலாந்து அணிக்கு தொடக்க ஜோடியின் பங்களிப்பு இருந்ததே இல்லை. எல்லா போட்டிகளிலுமே முதல் 5 ஓவர்களுக்கு உள்ளாக மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனான கேப்டன் வில்லியம்சன் வந்துவிடுவார். 

ஆனால் முக்கியமான இந்த இறுதி போட்டியில் அப்படி நிகழாதோ என்ற நம்பிக்கையை ஆரம்பத்தில் கொடுத்தார் கப்டில். கப்டில் தனது பொறுப்பை உணர்ந்து மிகவும் கவனமாக தொடங்கினார். முதல் இரண்டு ஓவர்களுக்கு 8 ரன்கள் அடிக்கப்பட்டது. வோக்ஸ் வீசிய மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் நிகோல்ஸுக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. அதை நிகோல்ஸ் ரிவியூ செய்தார். ரிப்ளேவில் பந்து ஸ்டம்புக்கு மேல் சென்றதால் நிகோல்ஸ் தப்பினார். 

ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் அப்பர் கட் ஷாட் மூலம் கப்டில் அபாரமான சிக்ஸர் ஒன்றை அடித்தார். அதே ஓவரில் பவுண்டரி ஒன்றையும் அடித்தார். இந்த உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட நல்ல ஸ்டார்ட் கிடைக்காமல் தவித்துவந்த கப்டிலுக்கு இந்த போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதை அவர் பயன்படுத்தி கொள்ளவில்லை. வோக்ஸ் வீசிய 7வது ஓவரின் இரண்டாவது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதை கப்டில் ரிவியூ செய்ய, ரிப்ளேவில் அவுட் என்பது உறுதியானதால் ரிவியூவையும் இழந்து பெவிலியனுக்கு திரும்பினார் கப்டில்.

18 பந்துகளில் 19 ரன்கள் அடித்து கப்டில் அவுட்டாக, நிகோல்ஸுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.