ஹர்திக் பாண்டியாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 193 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. இதற்கு முன் ஆடிய 4 போட்டிகளில் இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், 4வது வெற்றியை பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ராசி வாண்டெர் டசன், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜிம்மி நீஷம், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
குஜராத் டைட்டான்ஸ் அணி:
மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி, யஷ் தயால்.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் அதிரடியாக தொடங்கினார். 6 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் அடித்த வேட் 2வது ஓவரில் ரன் அவுட்டானார். 3ம் வரிசையில் இறங்கிய விஜய் சங்கர் 7 பந்தில் 2 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில்லும் 13 ரன்களுக்கு நடையை கட்டினார்.
53 ரன்களுக்கு குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அபினவ் மனோகரும் இணைந்து அடித்து ஆடினர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 86 ரன்களை சேர்த்தனர். 28 பந்தில் 43 ரன்கள் அடித்து அபினவ் மனோகர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்ததுடன், கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். டெத் ஓவரில் களமிறங்கிய டேவிட் மில்லர், பிரசித் கிருஷ்ணா வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரிகளும், குல்திப் சென் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளும் விளாசினார். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். பாண்டியா 52 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். டேவிட் மில்லர் 14 பந்தில் 31 ரன்கள் அடித்தார்.
ஹர்திக் பாண்டியாவின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 192 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 193 ரன்கள் என்ற கடினமான இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
