ஐபிஎல் போட்டியில் மாற்றம்: 16, 17 தேதிகளில் நடக்கும் போட்டிகளில் மாற்றம்!
ஐபிஎல் தொடரில் வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடக்கும் போட்டிகள் மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் தேதி முதல் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
இதுவரையில் நடந்த 14 போட்டிகளில் 2 போட்டிகளில் அவே அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், 12 போட்டிகளில் ஹோம் மைதான அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இன்று பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
மேலும், டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் வரும் 16 ஆம் தேதி நடக்க இருக்க கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டியானது 17ஆம் தேதிக்கும், 17ஆம் தேதி நடைபெற இருந்த குஜராத் மற்றும் டெல்லி இடையிலான போட்டியாது 16ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சென்னையில் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் இறுதிப் போட்டியானது எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.