இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான இர்ஃபான் பதான் நேற்று ஓய்வு அறிவித்தார். 2003ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இர்ஃபான் பதான் 2012ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடினார். 29 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1105 ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 120 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1544 ரன்களை அடித்துள்ளதோடு 173 விக்கெட்டுகளையும் இர்ஃபான் பதான் வீழ்த்தியுள்ளார்.  

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் இர்ஃபான் பதான்.  ஹர்பஜன் சிங்கிற்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்தியது அவர் தான். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தினார். இர்ஃபான் பதான் தனது ஹாட்ரிக்கில் வீழ்த்திய மூன்று வீரர்களுமே சிறந்த வீரர்கள். அதில் இருவர் தலைசிறந்தவர்கள். யூனிஸ் கான், முகமது யூசுஃப் ஆகிய 2 தலைசிறந்த வீரர்களும் அந்த ஹாட்ரிக்கில் அடங்குவர். சல்மான் பட், யூசுஃப், யூனிஸ் கான் ஆகிய சிறந்த வீரர்களை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தியவர். 

2012ம் ஆண்டுக்கு பிறகு இர்ஃபான் பதான் இந்திய அணியில் ஆடவில்லை. ஐபிஎல்லில் 2017ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணியில் இருந்தார். அதன்பின்னர் கடந்த 2 சீசன்களிலும் ஆடவில்லை. இந்நிலையில் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் இர்ஃபான் பதான் கடந்த சில தினங்களுக்கு முன் ஓய்வு அறிவித்தார். மிகக்குறுகிய காலமே ஆடியிருந்தாலும், இந்திய கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக பெயர் பெற்றவர்.

இர்ஃபான் பதான் ஓய்வு அறிவித்ததை அடுத்து, அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து அவரது எதிர்காலத்திற்கு முன்னாள் வீரர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். 

அந்தவகையில், இர்ஃபான் பதான் கெரியரில் சிறப்பாக ஆடிய காலக்கட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல், இர்ஃபான் பதான் குறித்து பேசியுள்ளார். இர்ஃபான் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேசிய கிரேக் சேப்பல், இர்ஃபான் பதான் அணிக்காக எந்த ரோலையும் மனமுவந்து ஏற்று மகிழ்ச்சியுடன் தனது முழு திறமையையும் வெளிப்படுத்துவார். அவர் மிகவும் துணிச்சலான, தன்னலமற்ற வீரர். அவர் எந்தளவிற்கு தகுதியான ஆல்ரவுண்டர் என்று களத்தில் நிரூபித்திருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அபாரமாக ஆடியிருக்கிறார். இலங்கைக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறங்கி 93 ரன்களை குவித்தார். அவரது ஸ்விங் பலிவுங் அபாரமாக இருக்கும். என்னை பொறுத்தமட்டில், கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வீழ்த்தியதுதான் ஹைலைட் என்று கிரேக் சேப்பல் தெரிவித்தார்.